யாருமற்ற பிரகாரம்
நான், நீ
மற்றும்
ஒளி உமிழும்
ஒரு சிறு மணி விளக்கு
பிரானே
இருண்ட பீடத்திலும்
மினுங்கும் உடலோய்
மடிந்த உன் உதடுகளின் முடிவில்
யுகம் யுகமாய்க் கசந்த முறுவல்
பாதி மூடிய உலோக விழிகளிலோ
பறவையொன்றின் சாந்தம்
தேவே
என் பெம்மானே
இப் ப்ரியம் மிகு காதலை
எங்கு வைக்க
உன் காலடியிலா
அன்றி…
……
பவித்திரமிழந்தன அந்நாட்கள்
எம்பொருட்டு இறந்தவர்களுக்கும்
இருப்பவர்களுக்குமாய் ஏற்றிய மெழுகொளியில்
நிர்வாணிகளானோம் கூச்சமற்று
தீபங்களில் செழும்பேறிக்
கனத்தது காலம்
காளியாச்சி…
ஒளிவற்றிப் போயினையே உன் கண்கள்
தாய்மார்
புரண்டழப் புரண்டழ
தாகிகளின் பொருட்டு
வெறுமையை ஊற்றினோம்
இம்முறை
எமக்கு வாய்த்ததென்னவோ
இசைகுலைந்த பாடல்….
– கார்த்திகை முன்னிரவு 2016 –
பிரியாந்தி