Image default
ஆக்கங்கள் புனைவுகள்

ஏவல் – பாத்திமா மஜீதா

அல்லாஹூ லாஇலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்…. ஆயத்துல் குர்ஷியை ஓதி ஓதி சைத்தூன் பாலர் பாடசாலையின் ஹோலை மூன்று தடவை சுற்றி வலம் வந்தாள்.

நாற்பது அடி அகலமும் அறுபது அடி நீளமும் கொண்ட அந்த ஹோல் மூலையின் கட்டில் தனது இரு முழங்கைகளையும் குத்தி றைஹான் பலகையில் வைக்கப்பட்ட குர்ஆனை போல நடுவில் முகத்தை இருத்தினாள். அன்று காலையில் நடந்து முடிந்த காழி நீதிமன்ற நிகழ்வுகளைத் தனது மனக்கண்ணாடி முன் நிறுத்தியவளாக ஆழ்ந்த சிந்தனையில் மிதந்தாள்.

ஹோலின் இரு பக்கத்திலும் வழக்காளிகளும் எதிராளிகளும் ஒருவரையொருவர் ஒட்டியபடி கதிரைகளில் அமர்ந்திருந்தனர். ரஹீம் டீச்சரின் கரும்பலகைக்கு முன்னால் எழும்பி நின்று எல்லாரும் அமைதியா இருங்க, வழக்கு நம்பர் கூப்புடப் போறன். நம்பர் கூப்பிடக்குல உடனடியா காழியாருக்கு முன் வந்து நிக்கனும். புள்ளயல் சத்தம் போட்டா வெளிய தூக்கிட்டு பைத்திரணும், புதுசா வழக்குப் பதிய வந்த ஆக்கள் இந்த பக்கத்தில இருக்கிற இப்றாஹீம் மெளலவிக்கிட்ட வந்து பதிங்க என்று உரத்த குரலில் கூறி முடித்தான். அப்பொழுது அங்கிருந்த குழந்தைகளில் இரு குழந்தைகள் வீரிட்டு அழத்தொடங்கியன. ரஹீம் பிய்யோனுக்கு முயலின் மூக்கில் புல்லுக்குத்துவதுபோல் கோபம் பிய்த்துக்கொண்டுவந்தது. உடனே தாய்க்காரி குழந்தையை தூக்கிகொண்டு வெளியே சென்றாள். சற்றுநேரத்தில் புஹாரி மெளலவி காழியார் வழக்குகளைக் கூப்பிடச்சொல்லுமாறு தனது அடித்தொண்டையால் கணைத்து ரஹீமின் பக்கம் திரும்பி தலையை ஆட்டினார்.

வழக்கிலக்கம் 21/4, வழக்காளி நூறுல் சுபைதா, எதிராளி முஹம்மட் அய்யூப் ரண்டு பேரும் வாங்க என ரஹீமின் குரல் ஒலித்தது. பொலிஸ்டர் துணியாலான கருப்பு ஹபாயாவுடன் தனது மூன்று பிள்ளைகளின் கைகளையும் இறுக்கப் பற்றிக்கொண்டு சுபைதா காழியார் முன் நின்றாள். அவளது முகம் வெளு வெளுத்துப்போய் வியர்வை புள்ளிகளால் நிரம்பியிருந்தது. என்ன வகையான கேள்விகள் தன்னை நோக்கிப் பாயப்போகின்றன என்ற பயமும் தன் முன்னே நிற்கின்ற கணவரை எதிர்கொண்டு தான் எப்படி பிரச்சினைகளைக் கூறுவது என்ற சஞ்சலமும் அவளைச் சூழ்ந்திருந்தன. எதிரில் நின்ற கணவனோ எந்தவித குற்ற உணர்வுகளுமற்று தானொரு ஆண் சிங்கம் என்பதை நிரூபிப்பதற்காக மார்பினை முன்னிறுத்தி புயங்களை அசைத்துக்கொண்டு வந்தான். காழியாரின் கேள்வி சன்னங்கள் சுபைதாவை நோக்கிப் பாய்ந்தன. உனக்கு என்ன பிரச்சினை, என்னத்துக்கு வழக்கு வச்சாய். மெளலவி, இவரு ஊட்ட உட்டுப்போய் ஆறுமாசம். நான் வாணாதாம். வேலைக்கி ஒழுங்காப் போறல, என்ன வெளிநாட்டுக்குப் போகச் செல்றாரு. உம்மாட ஊட்ட இரிக்காறு. கலியாணம் பேசுராஹ சுபைதா தனது கதையை இடைவிடாது அடுக்கினாள். சரி இப்ப காணும் நிப்பாட்டு. நீங்க இப்ப உங்கட பக்க நியாயத்த சொல்லுங்க என எதிராளியிடம் கேட்கப்பட்டது. இவள் பொய் பேசுறாள். ஒரு செல்லுக்கும் அடங்குறாள் இல்ல காழியார் என்ற ஒற்றை வரிகளால் தனது விடையை நிறுத்தினான். என்ட புள்ள பாவம், வெளிநாட்டுக்குப் போய் எல்லாக் காசையும் இவளுக்குதான் அனுப்பினான். இப்ப அவன்ட கையில ஒன்டும் இல்ல ,எங்களயும் இவள் வந்து எட்டியும் பார்க்கிறல, சரியான வாய்க்காரி என அய்யூப்பின் தகப்பனார் அவனது கூற்றிற்கு மேலும் சேர்த்துக்கொண்டார். அவனது கூற்றினை ஏற்றுக்கொள்வதுபோல் காழியாரின் முகம் அய்யூப்பை நோக்கிப் புன்னகையால் மலர்ந்தது. இல்ல காழியார் நான் அப்படியொன்டும்.. வாய் மூடு, வேற கதை தேவல, புருசனோட சேர்ந்து இணங்கி வாழத்தெரியாதா, பொம்பளன்டா அடக்கமா இருக்கணும், மாமி, மாமனார மதிக்கணும் காழியாரின் அறிவுரைகளால்  சுபைதாவின் கண்களினை நீர் நிறைத்தது. உனக்கு அவரு வேணுமா வாணாதா என்ற காழியாரின் கேள்விக்கு அவரு வேணும் என சுபைதா கூறினாள்.ஆனா எனக்கு வாணா என அய்யூப் ஒத்தக்காலில் நின்றான்.சரி அடுத்த மாசம் பதினைந்தாம் திகதி தவணை போடுறன். ரெண்டு தரப்பும் யோசிச்சிட்டு திரும்ப வாங்க. முடிவு தாறன், இப்ப எதிராளி மூன்டு புள்ளயலுக்கும் தலா இரண்டாயிரமும் தாய்க்கு மூவாயிரமும் சேர்த்து எட்டாயிரம் பராமரிப்பு கட்டிட்டு போங்க, இப்ப கட்ட காசி இல்லாட்டி வாரக்கிழமை கட்டணும் என்ற தீர்ப்புடன் அந்த வழக்கின் அன்றைய தவணை முடித்துவைக்கப்பட்டது.

வழக்கு இலக்கம் 23/4 வழக்காளி பாத்திமா ஹினாயா, எதிராளி முஹம்மட் கியாஸ் ரண்டு பேரும் வாங்க என்று ரஹீம் மீண்டும் குரலை உயர்த்தினான். இதற்கிடையில் ரஹீமின் குரலின் வீச்சில் அதிர்ந்து போன குழந்தைகளின் அழுகைக்குரல்கள் மீண்டும் அந்த ஹோலினை முற்றுகையிட்டன. ஹினாயா எந்தவித கலக்கமுமில்லாமல் காழியார் முன் வந்து நின்றாள். பதினைந்திற்கும் பதினெட்டு வயதிற்குமிடைப்பட்ட தோற்றம் அவளது முகத்திலிருந்தது. அந்த வயதிற்கேற்ற மாதிரியே அவளது குரலில் வலிமையும் எதையுமே மறைக்காது உண்மையை வெளிப்படுத்தும் பாங்கும் விரவியிருந்தது. இவரு எந்த நாளும் என் சந்தேகப்பட்டு கொடுமபடுத்துறாரு, போனில யாரோடையும் பேச உடமாட்டாரு. நிம்மதியா சாப்பிடக் கூட உடமாட்டார். மூனு மாசம் புள்ள வயித்தில இருந்த நேரம் அவர்ர புள்ள இல்லையாம் என என்ட வயித்தில உதச்சி அப்படியே புள்ள அழிஞ்சிட்டு. யாருக்கிட்டயும் இதை செல்லப்போடா என மிரட்டினாரு. இப்ப சந்தேகம் கூடி என்ன கொல்லப் பார்க்காரு. அதான் இவரோட வாழ ஏலா என்று முடிவெத்துட்டன். நான் பஸ்ஹ் செய்யப்போறன் என தனது குரலை அழுத்திக் கூறி முடித்தாள். காழியாரின் முகத்தில் தீப்பொறி தெறித்தது. என்ன தைரியத்தில நீ புருசன வாணான்டு செல்லுறாய். அவன் ஆம்புள சேத்தை கண்டா மிதிப்பான் தண்ணிய கண்டா கழுவுவான். இன்னொரு வாழ்க்கை தேடுற லேசான வேளையன்டு நினைச்சியோ என காழியாரின் வார்த்தைகள் ஹினாயாவின் மீது விழுந்தன. பின்னர் தம்பி இவ சொல்றது உண்மையா என கியாஸிடம் கேட்கப்பட்டது. கியாஸோ எந்தவித குற்ற உணவுமற்றவனாக அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கல காழியார். இவள் பொய் செல்றாள் என்றான். அப்ப நீ உன்ட புருசனோட ஒன்டா படுத்து எவ்வளவு நாளாகுது என்று காழியார் தனது கட்டை குரலில் உரத்து கேட்டார்.எதிர்பாராத அந்த வார்த்தைகள் ஹினாயாவின் உடம்பினை ஒரு குலுக்கு குலுக்கின. துணிச்சலும் நம்பிக்கையும் நிறைந்திருந்த அவளது வார்த்தைகள் இப்பொழுது காழியாரின் சுட்டெரிக்கும் கேள்விகளில் பொசுங்கிவிட்டன. செய்வதறியாது திகைத்துப்போய் நின்றாள். என்ன பேய் அறஞ்ச மாதிரி நிக்காய். பதில சொல்லு என்று மீண்டும் காழியார் சத்தமிட்டார். நாலு மாசம் ஆகுது என ஹினாயாவின் பதில் அவளது கண்ணீரில் நனைந்து வந்தது. சபையிலே இருந்தவர்களின் பார்வை முழுக்க ஹினாயாவினைக் குறி வைத்திருந்தன. அடுத்த மாசம் ஏழாம் திகதி தவண போடுறன். ரண்டு பேரும் வரணும் என அவ்வழக்கின் அடுத்த தவணைத் திகதி குறிக்கப்பட்டது.

அஸர் தொழுகைக்குரிய அதான் பக்கத்து பள்ளிவாயலில் ஒலிக்கத்தொடங்கியது.இன்டைக்கு காழி கோர்ட்டு வழக்கு முடிஞ்சு.இனி வார கிழமதான் நடக்கும்.போயிட்டு வாங்க என்று அறிவித்தவாறே ரஹீம் பயில்களிலை அடுக்கிக்கொண்டிருந்தான். மனச்சோர்வினையையும் வேதனையையும் அடைந்த அன்றைய பெண்கள் தங்களது வீடுகளை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.காழியார் என்ன தீர்ப்ப வழங்கினாலும் ஏத்துக்கதான் வேணும்.வேற என்னதான் செய்யலாம்அவர எதிர்த்து எப்படி கேள்வி கேட்க முடியுமா என்றாள் ஒருத்தி.சீ… இந்த காழியாரு சரியான பந்தம் வாங்குறாரு.அல்லாஹ் தான் இவருக்க கூலி கொடுக்கணும் என்றாள் இன்னொருத்தி.இஸ்லாத்தில கணவனும் மனைவியும் பிரியிறது கூடாத ஒன்டாம். நாயகம் கூட விரும்பலியாம். அதால இப்படி ஏசின காழிக்கோர்ட்டுக்கு வெட்கத்துல பொம்புளயல வரமாங்க அதான் காழியாரு இப்படி எல்லாருக்கும் முன்னுக்கு பொம்புளயல அவமானப்படுத்துரத்துக்குக் காரணமாம். நான் அப்பவே உனக்கிட்ட சொன்னன்தானே. புருஷன் என்ன செஞ்சாலும் பொறுமையா இருக்கனும் என்ட கதைய கேட்காம இப்ப வந்து நல்லா அவமானப்படு எனச் சில தாய்மார் தங்களது பெண் பிள்ளைகளிடம் கூறிக்கொண்டனர்.

மஃரீப் நேரம் நெருங்குவதை சைத்தூன் உணர்ந்தவளாக வீட்டிற்கு செல்லத் தயாரானாள். வெற்று பிஸ்கேட் மற்றும் டொபி தாள்கள், வாழைப்பழத் தோல்கள் கலந்திருந்த பாடசாலையின் மணலில் ஒரு பிடியை அள்ளி துணியில் பொடலமாகக் கட்டி இடிப்பில் சொருகினாள்.தலையை மூடியிருந்த தனது புடவையின் முந்தானையை சரி செய்து கொண்டாள்.

கொலுக்கில் ஓடுகளால் வேயப்பட்ட ஒற்றை முகட்டை உடைய ஒரு விராந்தையும் அதனைச்சுற்றி நான்கு அறைகளையும் உடைய வீடு.தென்னை மட்டையால் மூடப்பட்ட மல்லிகைப்பூ பந்தல் கொடியும் கொண்ட பந்தல் வீட்டின் முன் வாசலில் கம்பீரமாக நின்றது.உள்ளேயும் வெளியேயும் வீட்டின் சுவர்களை வெள்ளை நிறச்சுண்ணாம்பு உடுத்திருந்தது.அவ்வீட்டிற்கு வருபவர்களில் ஆண்கள் பந்தலிலும் பெண்கள் முன் வராந்தாவிலும் அமர்ந்து கொள்வார்கள்.சைத்தூனின் உம்மா, மூத்தம்மா,பூட்டிம்மா அனைவரும் அவ்வீட்டிலேயே பிறந்து வளர்ந்தார்கள்.பின்னர் சீதன வீடாக சைத்தூனிற்கும் காழியாருக்கும் அன்பளிப்பு செய்யப்பட்டது.காழியார் ஓய்வு பெற்ற இஸ்லாம்பாட ஆசிரியர்.அவருக்கும் சைத்தூனிற்கும் திருமணம் நடைபெற்று இருபது வருடங்களின் பின்னரே பானு பிறந்தாள்.

வீட்டின் பந்தலில் இருந்த சாய்மணக்கதிரையில் கண்களை மூடியவாறு காழியார் சாய்ந்திருந்தார். தான் நித்திரை என்பதைக் கணவர் பாசாங்கு செய்வதை சைத்தூன் உணர்ந்து கொண்டாள். காழியாருக்குக் காழி நீதிமன்றத்தில் கிடைக்கும் மதிப்பில் ஒரு துளியும் சைத்தூனிடம் இருந்து கிடைப்பதில்லை. காழியாரை எப்பொழுதும் அலட்சியமாகவே நோக்கினாள். தன்னிடம் நீதி தேடி வரும் பெண்களினை எப்படி அவமானப்படுத்துவாரோ அதைவிடப் பல மடங்கு அவமானம் சைத்தூனின் ஏளனமான பார்வையில் இருப்பதாகக் காழியார் உணர்ந்தார். அதை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். வெளியில் தெரிந்தால் தனது மானம், மரியாதை பறந்து விடும் என்பதாக உள்ளுக்குள் புளுகிக்கொண்டார். என்றோ ஒரு நாள் சைத்தூன் தனது காலடியில் விழுந்து கிடப்பாள் என மனப்பால் குடித்தார். அவ்வாறு அவள் அவரிடம் தஞ்சம் புகும்பொழுது எவ்வாறு அவளைத் தண்டிக்கலாம் எனப் பேராசைப்பட்டார். பொழுது மறையிர நேரம் ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்கடி திரிஞ்சிட்டு வாராய் என கேட்கக் காழியாரின் வாயை உன்னினார். ஆனால் அவரால் வாய் திறக்க முடியாது. சைத்தூனின் ஏளனப்பார்வையே அவரது கேள்விக்கு விடையாக அமைந்து அவரை மேலும் தோல்வி அடையச்செய்யும் என்பதால் நிறுத்திக்கொண்டார்.

உம்மா உங்களத்தேடி ரண்டு பொம்புளயல் வந்து காத்துக்கிட்டு இரிக்காங்க என்று பானு சைத்தூனிடம் தெரிவித்தாள். அஸ்ஸலாமு அலைக்கும். என்ன விஷயமா வந்தீங்க என்று சைத்தூன் வந்தவர்களிடம் விசாரித்தாள். நாங்க பிறைந்துரச்சேனையிலிருந்து இருக்கிற .என்ட மகன் கலியாணம் முடிச்சி ரண்டு வருஷம், இன்னும் புள்ள கிடைக்கல. அதோட அவன்ட பொஞ்சாதி பொல்லாதவள். மகன் கூட அவள்ற கதையத்தான் கேட்கான். அதால காழியாருக்கிட்ட போக ஏலா. எப்படியோ அவன அவளுக்கிட்ட இருந்து பிரிச்சு வேற கலியாணம் செஞ்சு குடுக்கணும். நீங்கதான் உதவி செய்யனும் என்று வந்த பெண்களில் ஒருவர் கூறி முடித்தாள். நான் குடும்பங்கள பிரிக்கிற வேலையெல்லாம் பார்க்க மாட்டன். நீங்க தெரியாம வந்திரிக்கீங்க என பதிலளித்துவிட்டு சைத்தூன் தனது அறையை நோக்கி நடந்தாள்.

கிரீச் என்ற சத்தத்துடன் அறையின் கதவு திறக்கப்பட்டது. மணக்குச்சியினதும் அத்தரினதும் வாசனை அறை முழுக்க தவழ்ந்து கொண்டிருந்தது. கருங்காலி மரத்தினாலான பொட்டகத்தினை சைத்தூன் திறந்து தனது இடுப்பில் சொருகியிருந்த மண் பொட்டலத்தினை வைத்து மூடினாள். பின்னர் முஸல்லாவினை கிப்லாவை நோக்கி விரித்து மஃரிப் தொழுகையை முடித்தாள். பின்னர் குர்ஆனுடன் அமர்ந்து கொண்டாள். தன்னை மறந்த வண்ணம் அல்குர்ஆனில் மூழ்கினாள். அவளுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கும் மனச்சோர்வுக்கும் அல்குர்ஆன் மட்டுமே மருந்தாகும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்திருந்தாள். சைத்தூனின்  நம்பிக்கையை நிரூபிப்பதுபோல் குர்ஆன் ஓத ஆரம்பித்த அடுத்தகணமே அவளது முகம் மலர்ந்துவிடும். சைத்தூன் குர்ஆன் ஓதும் ஒலி ஜன்னலின் வழியாக அந்த வீதி முழுக்க பரவி அக்கம் பக்கத்திலுள்ளவர்களின் வீடுகளைச் சென்றடையும். அந்த குர்ஆன் ஓதும் ஓசையை இறைவன் அருளிய பரகத்தாகவே அயலவர்கள் நம்பினார்கள். சைத்தூனின் குரலினைச் செவிமடுத்தால் முஸீபத்கள் கழிவதாகக் கருதினார்கள்.

சைத்தூனின் அறைக்கு நேரெதிராக காழியாரின் அறை இருந்தது. வழக்குகளின் பயிற்கட்டுகள் காழியாரின் அறையை நிரப்பியிருந்தன. பயிலுக்குள் அடங்கியிருந்த தூசு வாசமும் காழியாரின் சுருட்டின் புகையும் ஒன்றையொன்று கலந்திருந்தன. காழியாரின் அறையில் ரஹீமின் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும். ஏதாவது ஒரு பயிலை புரட்டிப் புரட்டி எழுதிக்கொண்டேயிருப்பான். காழியாரினைச் சந்திக்க வரும் வழக்காளிகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்குவதில் ரஹீம் வல்லவன். எத்தனை மணிக்குக் காழியாரின் மூட் வெளிச்சமாயிருக்கும், எப்பொழுது கோபமாயிருப்பார் என்பதெல்லாம் அவன் பதிவு செய்து வைத்திருப்பான். அதனால் காழியாரிடம் பேச வருபவர்கள் ரஹீம் பிய்யோனிடம் தான் நியமனம் எடுப்பார்கள். அதற்குரிய பரிசையும் ரஹீம் பிய்யோனுக்கு வழங்குவார்கள். எல்லாம் சரிவரும், காழியாருக்கிட்ட நான் பேசிக்கிறன், நீங்க ஒன்டும் கவலப்பட தேவயில்ல எனத் தன்னைப் பெரியவனாக நம்பவைத்துவிடுவான். அவனது கதையில் மயங்கிய பலர் ரஹீம் பிய்யோனை காழியாரினை விடவும் பெரிய இடத்தில் வைத்து மரியாதை கொடுப்பார்கள். காழியார் இரவில் நித்திரைக்கு செல்லும் வரை யாராவது குடும்ப பிரச்சினையில் சிக்கிய ஒருவரைச் சந்தித்துக் கொண்டேயிருப்பார். உரையாடலின் இறுதிக்கட்டத்தில் ரஹீமை அறையை விட்டு வெளியேறுமாறு சமிக்ஞை கொடுப்பார். ஆனால் குறிப்பிட்ட நபர் எவ்வளவு பணம் காழியாருக்கு கொடுத்தார் என்பதை அடுத்த நாள் அந்நபரின் வழக்கில் கூறப்படும் தீர்ப்பினை வைத்து ரஹீம் கண்டுபிடித்துவிடுவான்.

இரவுவேளைகளில் காழியாருக்கு நிம்மதியான உறக்கம் இருக்காது. பாயிலும் கட்டிலிலும் மாறி மாறித் தூங்குவார். சில வேளைகளில் தூக்கத்தில் மராத்தை கதைப்பார். பானு தண்ணி கொண்டா என மகளை எழுப்புவார். அலுமாரிக்குள் இருக்கும் பண நோட்டுக்களை திரும்ப திரும்ப எண்ணிப்பார்ப்பார்.

வழமைபோல காழி நீதிமன்றத்திற்கு வரும் பெண்கள் தங்களது வாடிய முகத்தையும் கசங்கிய மனநிலையும் கொண்ட அதேயளவு காழியாரின் வீட்டிற்கு வரும்பொழுதும் இருக்கும். ஆனால் காழியார் அதிலிருந்து வேறு பட்டவர்.கோபமும் சீற்றமும் பொரிந்து கொண்டிருக்கும் அவரது முகம் அதற்கு மாறாக புன்னகையையும் சிரிப்பையும் வலிந்து வரவழைத்து கொள்வார்.வீட்டிற்கு தன்னை சந்திப்பதற்காக வருபவர்கள் முன் தான் ஒரு ஏல வியாபாரி போன்ற தோற்றமுடையவராக சைத்தூனிற்கு காட்சியளித்தார்.வழக்குகள் ஏலத்தில் விற்கப்படுவதும் அதில் அதிகம் வெற்றி பெறுபவர்கள் ஆண்கள் என்பதையும் சைத்தூன் அறிந்திருந்தாள்.அன்று வியாழக்கிழமை ழுஹர் நேரம் மல்லிகை பந்தலில் யாரோ காழியாரை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் .கறுப்பு நிற ஹபாயாவும் நீல நிற பர்தாவும் அணிந்த ஒரு பெண்ணும் அவளது வலது கையில் ஒரு குழந்தையை இறுத்தியிருந்தாள்.கூடவே வயது போன ஒரு ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தனர்.காழியரு இருக்காறா என அந்த ஆண் கேள்வியை தொடக்கினார்.அவரு பள்ளிவாசலுக்கு போயிருக்காரு,இப்ப வந்துடுவாரு உள்ளுக்கு வந்து இரிங்க என சைத்தூன் அழைத்தாள்.கதிரையில் அமர முந்தியே அப்பெண்ணின் கையிலிருந்த குழந்தை வீரிட்டு அழுதது.எவ்வளவோ முயற்சி செய்தும் தனது அழுகையை அக்குழந்தை நிறுத்தவில்லை. அடுப்பில் முறுக காய்ச்சிய பசுப்பால் வெண்ணிற ஆடை படிந்த ஒரு கிளாசில் ஊற்றி வந்து சைத்தூன் குழந்தையின் தாயிடம் கொடுத்தாள்.தனது உதட்டினை கிளாசின் வாயில் வைத்து தனது குருவிசொண்டால் பாலை உறிஞ்சி உறிஞ்சி குடித்தது.கூடவே குழந்தையின் அழுகையும் கரைந்து ஓடிவிட்டது.பின்னர் தனது கைகளால் குழந்தையின் பிடரியை பிடித்து முதுகை தாய் தட்டினாள்.இவனுக்கு ஒரு வயசாகிட்டா என சைத்தூன் தாயைப்பார்த்து கேட்டாள்.இல்ல மனே இப்பதான் பத்து மாசம்.அவன் வவுத்துல ரண்டு மாசமா இருக்கக்க அவன்ட வாப்பா கட்டாருக்கு பெயித்தாரு. போஹ முந்தி பொஞ்சாதியோட நல்லா பாசமா இருந்தாரு.போய் மூனு மாசத்தில இருந்து இவளோட சண்டதான்.இவ மேல சந்தேகமாம்.இவன் அவர்ர புள்ள இல்லயாம்.இப்படி என்ட புள்ள மேல பலி போர்ரதுக்கு அல்லாஹ்தான் கூலி குடுக்கணும் பக்கத்திலிருந்த வயதான பெண் கூறி முடித்தாள் .அவரு கட்டாருக்கு போய் ரண்டு வருசமாகுது.போனத்துல இருந்து செலவுக்கு காசு அனுப்பல.அவர்ர உம்மாக்கும் வாப்பாக்கும் மட்டும் தான் காசு வருகுது .புள்ளக்கி பராமரிப்பு செலவு கட்ட செல்லி வழக்கு வெச்சன்.நான் வாணாதாம் என கடிதம் அனுப்பி ரண்டு தலாக்கு செல்லிட்டாரு.இப்ப வார கிழம அடுத்த தவண இருக்கி,எப்படியாவது மூனாவது தலாக்க செல்ல வைக்காம அவரு வரங்காட்டிலும் காழியார தடுக்கச்செல்லத்தான் இப்ப வந்தன் ,வழக்குக்கு காழியாருக்கு காசி குடுக்க எனக்கிட்ட காசி இல்ல,காழியாரு என்ன செல்லுவாரோ தெரியா,நீங்க கொஞ்சம் அவரோட கதைங்களேன் என அந்த பெண் சொல்லி முடிக்கமுன் பெருத்த செருமலுடன் காழியார் அறையின் உள்ளே நுழைந்தார். வந்தவர்களும் அவருக்கு பின்னால் சென்று ஏதோ மன்றாடிக்கொண்டிருந்தார்கள். இப்படி எத்தனையோ மன்றாட்டங்களை ,கோரிக்கைகளைசைத்தூன் தன் கண் முன்னால் பார்த்திருக்கின்றாள். நீதி என்பதை தலைகீழாக வரைவிலக்கணப்படுத்தும் தனது கணவருக்கும் வாழ்க்கையில் சிக்குண்டு உழலும் பெண்களுக்கும் என்றாவது ஒரு நாள் இறைவனின் நீதி பொழியும் என்பதில் ஈமான் கொண்டிருந்தாள்.ஆகையால் தனது கணவருடன் அங்கே நடைபெறுகிறும் அநியாயங்கள் தொடர்பில் கலந்துரையாட விரும்பாதவளாக எந்தவித  உணர்வுமற்றவள் போல் அவ்வீட்டில் நடமாடிக்கொண்டிருந்தாள்.அன்று ம் சனிக்கிழமை ,சைத்தூன் வழமைபோல பாலர்பாடசாலையின் கேர்ட்டினை கடந்து உள்ளே நுழைய முயற்சித்துக்கொண்டிருந்தாள். நீலக்கண்ணுடைய சாம்பல் நிறப்பூனையொன்று குறுக்கே அவளைக்கடந்து பாய்ந்தது. பாடசாலை மண்டபத்தினைச் சுற்றி காகங்கள் கரைந்துகொண்டிருந்தன. நீண்டதொரு புயற்காற்று சைத்தூனின் தலையை மூடியிருந்த முந்தானையுடன் போராடியது. கடைசியில் முந்தானை விழுந்து அவளது கழுத்திலிருந்த பாசிமணி மாலையுடன் ஒட்டிக்கொண்டது. சைத்தூன் ஒரு பிடி மண்ணை அள்ளிக்கொண்டு வீட்டினை நோக்கி வேகமாக நடந்தாள்.

காழியாரின் அறையில் எப்பொழுதுமில்லாத சத்தம் துளையிட்டுக்கொண்டிருந்தது. ஏற்கனவே சந்தித்த ஆண் குழந்தையும் கண்களைக் கசக்கியவாறு அந்த இளம்பெண்ணும் அவளது வயது முதிர்ந்த பெற்றோர்களும் காழியாரினைச் சுற்றி முற்றுகையிட்டுக்கொண்டிருந் தனர். காழியார் தனது கதிரையிலிருந்து வேகமாக எழும்பி இதுக்கு மேல எதுவும் பேசப்போடா, வெளியேறுங்க என விரட்டினார். இருந்த ஒரு மோதிரத்தையும் மின்னியையும் வித்து இந்த காழியாருக்கு குடுத்தும் இப்பிடி என்ட புள்ளட தாலிய அறுத்துப்போட்டாரே, என்ட புள்ளட வாழ்க்கையில மண்ண அல்லிப்போட்டுட்டாரே,இவருக்கு அல்லாட தண்டன கிடைக்காம ..வயது முதிர்ந்த அந்த பெண் சைத்தூனைக் கண்டதும் கதையை இடையில் நிப்பாட்டி விட்டு வேகமாக நடந்தாள்.

அங்கு வந்தவர்களின் பதட்டத்தை அவதானித்த சைத்தூனின் மனம் துவண்டு போனது.அந்த ஆண் குழந்தையின் முகமும் தாயின் கலக்கமும் சைத்தூனை படபடக்க செய்தது.மிக வேகமாக சென்று தனது அறைக்குள் நுழைந்து தாழ்ப்பாள் இட்டுகொண்டாள்.

அன்றைய இரவு நீண்டு கொண்டிருந்தது. வானம் கறுத்தது. மின்னலும் இடியும் மாறி மாறி போர் புரிந்தன. இருட்டிய வானம் அலறிய சத்தத்தினை எழுப்பிக்கொண்டு மழையைப் பிரசவித்தது. இடியின் கீற்றுக்கள் காழியாரின் வீட்டுக்கூரையைத் துளைத்து வேகமாக உள்ளே நுழைந்தன. லாஇலாஹ இல்லல்லாஹ் என சைத்தூன் கலிமா உரைக்க துடங்கினாள், பானுவின் அழுகைக்குரல் பக்கத்து வீடுகளில் செவிகளுக்குள் புகுந்தது. என்ட ரஹ்மானே காழியார வீட்டுக்குள்ள இடி உழுந்துட்டு ..அயலவர் விரைந்தனர்.

முஅத்தீன் ஸூபஹ் தொழுகையை முடித்துக்கொண்டு மிம்பரில் ஏறி நின்று 

மைக்கை கையிலெடுத்தார். ஜனாஸா அறிவித்தல். பள்ளிச்சேனையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட புஹாரி மெளலவி காழியார் அகால மரணமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற மீராப்போடியார் கதீஜா பீவியின் மகனும் காலஞ்சென்ற சாஹிப் மெளலானாவின் மருமகனும் சைத்தூன் மெளலவியாவின் கணவரும் சாஹிரா பானுவின் தந்தையுமாவார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகையின் பின்னர் ஜூம்மா பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படும்.

பாத்திமா மஜீதா

Related posts

விஞ்ஞானமும் அகராதியும் : பதிப்புகள் பற்றியும் கட்டுரை பற்றியதுமான உரையாடல்

editor

கிணறு -ஷமீலா யூசுப் அலி

editor

வணக்கப்பாடல்

puthiyasol

3 comments

Leave a Comment