Image default
ஆக்கங்கள் புனைவுகள்

லெப்ரினன் கேணல் இயற்கை -யதார்த்தன்

சிவலைக்கண்டு காணமற்போனதை லேசா எடுத்துக்கொள்ளேலாது, காலையில் பட்டியை விட்டு மாடுகளை விரட்டி ரோட்டுக்கு இறக்கும்போதே செல்லாச்சி    சிவலைக்கண்டு  நேற்றும் வாய்க்காலைத்தாண்டி வயலுக்குளை இறங்கினதை ஞாபகப்படுத்தினவா.  நேரம் நாலுமணியாகியிருக்கும், மேற்கால வானம் செக்கச் சிவந்து போயிருந்தது.  மிச்ச மாடுகளைப் பட்டியில் கொண்டுபோய் அடைத்துவிட்டு   கிழவியிடம் சொல்லிவிட்டு வந்துதான் கண்டைத்தேட வேணும்.  கிழவி தூசத்னதாலை திட்டத்தான் போகுது. எண்டாலும் வேற வழியில்லை. இண்டைக்கு வெள்ளிக்கிழமை எண்டுறதால பின்னேரம் வைரவர் மடைக்கு கிழவி போயிருக்கும். அந்த ஒரு விசயம் மட்டும் கொஞ்சம் ஆறுதலா இருந்தது.

மாடுகளை  வேகமா கலைச்சு வயற்கரை பட்டியில் கொண்டுபோய் அடைத்தேன்.  கிழக்குப்பக்கமாக ஓடுற ஐஞ்சாம்  வாய்க்கால் பக்கமா நடந்து ஊருக்க வந்து சேர்ந்தன்.  விளையாட்டு மைதானத்துக்குப் பக்கத்தில  நாலஞ்சு சின்னப்பெடியள் கிட்டிப்புள் விளையாடிக்கொண்டிருந்தாங்கள்.  இண்டைக்குத்தானே வைரவர் மடையெண்டு ஆச்சிக்கிழவி சொன்னது… ஆனா பெடிபெட்டையெல்லாம்  கிறவுண்டடியில நிக்கிறது அதிசயமா இருக்க அவ்விடத்த போனேன்.

“டேய் மடைக்கு போகேல்லையோ?”

“ஆறுமணியாகும் அண்ணை”

“டேய் ஆச்சீன்ர சிவலக்கண்டு இந்தப்பக்கம் போனதோ?”

“கோழிக்கால் குறியோ?”

“ஓம் ஓம் கண்டனியோ?”

பேசுக்க போய் பூக்கண்ட  மேஞ்சுதெண்டு பிடிச்சு வைச்சிருக்கினம்.

எனக்கு சுரீரெண்டு இருந்தது, சோலி முடிஞ்சுது. கிழவிட்ட நான் துலஞ்சன்.

ஊருக்கு நடுவில் இருந்த மாலதி படையணிக்காற பெட்டையளின்ர பேஸ் அது.  அறுபது எழுபது பெட்டையள் அங்க தங்கியிருதவை.  அது ஒரு மாஞ்சோலைக்காணி. ஒரு பெரிய தொலைத்தொடர்பு கோபுரம் பேசுக்கு நடுவில இருந்தது.  ஊரில எங்க நிண்டு பாத்தாலும் மரங்களுக்கு இடையில அந்த கோபுரம் தெரியும்.  அந்த பேசுக்கு வடக்குப் பக்கம்  எங்கட பள்ளிக்கூடத்தின்ர  கிறவுண்ட் இருந்தது.  கிறவுண்டுக்கு அங்கால பள்ளிகூடம் தெரியும். நாங்கள் கிறவுண்டில விளையாடேக்க அந்த பேசில வோக்கி இரையிற சத்தம் வோக்கில கதைக்கிற சத்தம் எல்லாம் கேக்கும். முல்லைத்தீவுக்கே அதுதான் தொலைத்தொடர்பு மையம் எண்டு ஏ எல் படிக்கிற அண்ணை ஒராள் சொன்னவர். அதால நாங்கள் அந்த பேசை வோக்கி பேஸ் எண்டு கதைப்பம். ஆச்சிக்கும் அந்த பேசில இருக்கிற பெட்டையளுக்கும்  ஆகாது.

.

 கொஞ்ச நாளைக்கு முதல் ஆச்சின்ர  வளவு ஒண்டுக்க  போய் இயக்கப்பெட்டையள் மாங்காய் ஆஞ்சு இருக்கினம். கணக்கா ஆச்சியும் அங்க போக தாங்கள்  ஜிபிஸ் சிக்னல் பாக்கிறம் எண்டு வோக்கியைத் தூக்கிக்காட்டி கதை விட்டிருக்கினம். ஆச்சிக்கு பத்தீட்டுது.

எடி குமரியள் வோக்கியை காட்டி எனக்கு பொய் சொல்லுறியளோடி? நான் என்ன மொக்கு கிழவி எண்டு நினைச்சியளோ?  ஆஞ்ச மாங்காயெல்லாம் வச்சிட்டு ஓடுங்கோடி. எண்டு ஆச்சி ஒண்டு ரண்டு தூசனத்தாலையும் பேசி இருக்கு, பெட்டையள்  பயந்து போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடிட்டுதுகள். அண்டேல இருந்து ஆச்சிக்கும் இயக்கப்பெட்டையளுக்கும் சண்டைதான். ஆச்சிக்கு வைரவர் கோயில்ல கலை வாறது, குறி சொல்லுறதெல்லாம் பொய் எண்டு வான்மதி அக்கா ஆருக்கோ சொன்னவா எண்டு பேஸ் வாசலில போய் நிண்டு  சண்டைபிடிச்சிது கிழவி.  அதுக்குப்பிறகு கிழவியோடை  அடிக்கடி  வம்பிழுக்கிறதுதான் அங்கை இருக்கிற ஒண்டு ரெண்டு  இயக்க பெட்டையளுக்கு பொழுதுபோக்கு.

ஒருநாள் பின்னேரம்  ஆச்சி  வைரவர் கோயில்ல கலையாடி  குறி சொல்லத்தொடங்கின நேரம் நாலஞ்சு இயக்க பெட்டையள் சைக்கிள்ள வந்து இறங்கிச்சினம்.  கொஞ்ச நேரம் ஆச்சி  குறி சொல்லுறத அமைதியா பாத்துக்கொண்டு நிண்டவை. அப்ப ஒரு பெட்டை ஆச்சிக்கு முன்னால பயபக்தியோட போய் இருந்தாள் ஆச்சி அவான்ர தலைக்கு மேல  திருநீறை எறிஞ்சுபோட்டு  நெத்தில ஒரு குறியைப்போட்டா.  பக்கதில இருந்த  விதானையார்,  அம்மாட்ட என்ன கேக்க போற பிள்ளை?

அவள் பயபக்தியோட

“தமிழீழம் எப்ப கிடைக்கும்?”

ஆச்சி வீறிட்டுக் கத்தி, வீபூதித் தட்டை தூக்கி எறிஞ்சிட்டு மயங்கிப் போனா. ஊரே அந்த பெட்டையளைப் பேசிச்சு, சனம் குழம்புறதப்பாத்திட்டு, ஆக்கள் சைக்கிளை எடுத்துக்கொண்டு போட்டினம். அடுத்தநாள் அந்த பேசுக்கு பொறுப்பாளாரா இருந்த  தாமரை அக்கா ஆச்சியை பேசுக்கு கூபிட்டா. ஆச்சி என்னையும் கூட்டிக்கொண்டு  போனா. அங்க ஊராக்களும்  விதானையாரும் கொஞ்ச இயக்கப்பெட்டையளும் நிண்டினம்.  முதல் நாள் கோயிலுக்கு வந்த  இயக்க பெட்டையள் தலையை குனிஞ்சபடி நிக்க தாமரையக்கா கண்டபாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தவா.

“சனங்களின்ர நம்பிக்கையளை இப்பிடிப் பகிடி பண்ணவோ நாங்கள் போராட வந்தனாங்கள்,  நான் மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பப்போறன், உங்களுக்கு பணிஸ்மண்ட் மட்டும் காணாது”

தாமரை அக்கா பேசிக்கொண்டிருக்க எல்லாரும் பேசாமல் இருந்திச்சினம். 

“அம்மா எங்கட பிள்ளையள் செஞ்சதுக்கு மன்னிப்பு கேக்கிறம்,  ஆக்களுக்கு பணிஸ்மெண்ட் குடுத்திட்டன், உங்களிட்ட மன்னிப்பும் கேப்பினம்” எண்டு சொன்னா. ஆச்சி அங்க ஒரு சன்னதம் ஆடுவா எண்டுதான் நான் நினைச்சன் ஆனா ஆச்சி

“வைரவரரோட விளையாடக்கூடாது பிள்ளையள்” எண்டு  அவர்களைப் பார்த்து மிக நிதானமாகச் சொன்னா.

பேசில  பூக்கண்டை மேஞ்ச சிவலைக்கண்டு ஆச்சின்ர கண்டு எண்டு தெரிஞ்சா, இதுதான் சாக்கெண்டு கண்டைத்தராம ஏதாவது சொல்லுவினமோ எண்டு எனக்கு பயமா இருந்திச்சு.  நான் ஆச்சின்ர பேரப்பெடியன் எண்டும் எல்லாருக்கும் தெரியும்.  வேற வழியில்லை போய்த்தான் ஆகோணும். போனன்.

பேஸ் வாசல் திறந்து கிடந்தது  உள்ளுக்கு போனன், ஆரையும் காணேல்ல. உள்ளுக்கு நிப்பினம் என்று ”அக்கா, அக்கா“ எண்டு கூப்பிட்டன். பதிலில்லை. திரும்பவும் கூப்பிடக் கூப்பிடப் பதில் இல்லை. இருட்ட வேற தொடங்கீட்டுது. ஆச்சி மடைமுடிய வீட்ட வந்திடுவாள். மடை வைக்கிற நாளில சாத்திரம் சொல்லுறதும் இல்லை.  கத்தி கூப்பிட்டேன்.

“அக்கா அக்கா”

பதிலில்லை, மெல்ல சிவலைக்கண்டு கட்டியிருந்த மாமரத்துக்கு பக்கதில போனன்,  சிவலை என்னை அடையாளம் கண்டவனாய் தலை உலுப்பி நான் கட்டிவிட்ட  மணிகளையும் சங்கையும் கிலுக்கியபடி என்னை நெருங்கி வரப் பாத்தான்.  அவனுடைய  கயிற்றை கழுத்தில் இருந்து கழற்றி அவனைக் கலைத்து வெளியே துரத்தினேன்.  மாவில் கட்டியிருந்த கயிற்றை அப்படியே விட்டேன்.  வந்து பார்த்துவிட்டு சிவலை கயிற்றை கழற்றி கொண்டு போய் விட்டது என்று நினைத்துக்கொள்ளட்டும்.  மீண்டும் சுற்று முற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. மெல்ல நழுவி வெளியே வர சிவலை எனக்காக காத்திருந்தான்.  அவனை இரண்டு திட்டுத் திட்டிவிட்டு  வேகமாக பட்டியை நோக்கி கலைத்தேன். சிவலையை பட்டியில் அடைத்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது.   கைகால்களை அலம்பி விட்டு  சேட்டை மாற்றிக்கொண்டு மடைக்கு புறப்பட்டேன்.

வைரவர் கோயில் வளாகத்தில் ஜெனரெற்றர் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  நான்கைந்து டியூப்லைட் கட்டி இருந்தவை.  வெளியில இருந்த தகர கொட்டகைக்குள்ள ஊர்ச்சனம் கூடி நிண்டுது. அங்கால கொஞ்சம் தள்ளி கொஞ்ச  தனா நம்பர் மோட்டச்சைக்கிள்களும், சைக்கிளும் நிண்டது.  அந்த மோட்டச்சைக்கிள்களையும் சைக்கிளையும் எனக்கு நல்லாத் தெரியும், அவை பேசில இருந்த இயக்கப் பெட்டையளின்ர  தான்.

ஊர் சனத்துக்க புகுந்து அங்க என்ன நடக்கெண்டு பாக்கப்போனன்.  நாலு பிளாஸ்ரிக் கதிரையில விதானையார், ஆச்சி, எங்கட பள்ளிகூட  அதிபர்,  தாமரை அக்கா எல்லாரும் இருந்தினம்.  ஊர் பொம்பிளையளும் சின்னப் பெடி பெட்டையளும்  அவைக்கு முன்னால விரிச்சிருந்த தறப்பாளில இருந்தினம்.  ஆம்பிளையள் அவையளை சுத்தி நிண்டினம். ஏதோ கூட்டம் நடக்குதெண்டு எனக்கு விளங்கிச்சு. கூட்டத்தை விலக்கிக் கொண்டு  முன்னாலை போய் நிண்டன். அதிபர் எழும்பி பேசத்தொடங்கினார். வழமை போல தன்ர தொப்பைக்கு கீழ வழுக்கிக்கொண்டு நிண்ட பெலிட்டை பிடிச்சு மேலை இழுத்து விட்டுட்டு அதிபர் கதைக்கத்தொடங்கினார்.

உங்கள் எல்லாரோடையும்  கதைச்ச பிறகுதான் இண்டைக்கு நான் கோயில்ல  இந்த கூட்டத்தைக் கூட்ட முடிவெடுத்தனான்.  பொறுப்பாளார் தாமரை என்ர பிள்ளை மாதிரி,  அவாவும்  மேலிடமும் எங்கட கோரிக்கையை ஏற்றுக்க்கொள்ளுவினம் எண்டு நம்புறன்.  உங்கள் எல்லாருக்கும் தெரியும் இப்ப கிபிரடி கூடிட்டுது.  போன மாசம்  செஞ்சோலையில கிபிர் அடிச்சு  எங்கட பிள்ளையள் 60 பேர் படுகொலை செய்யப்பட்டது உங்கள் எல்லாருக்கும் தெரியும்.   அதில இரண்டு பிள்ளையள்  எங்கட பக்கத்து ஊரில இருக்கிற பள்ளிக்கூட பிள்ளையள் எண்டும் உங்களுக்குத் தெரியும். அந்த துயரச்சம்பவத்துக்கு பிறது பள்ளிக்கூட பிள்ளையளுக்கும் பாதுகாப்பு இல்லை எண்டு விளங்கீட்டு.  பள்ளிகூடங்களுக்கு மேல ஒலிம்பிக் டோச்  ஒண்டின்ர படத்தைக் கீறச்சொல்லி வலயக்கல்வி அலுவலகம் அறிவிச்சிருக்கு, ஆனா அதெல்லாம் நம்பேலாது.  கிபிர் எப்பவும் அடிக்கலாம்.

நாலஞ்சு நாளுக்கு முதல் கொஞ்ச பெற்றோர் என்னோட வந்து கதைச்சவ, பிள்ளையள பள்ளிக்கூடம் அனுப்பப்பயமா இருக்கெண்டு சொன்னவை. பள்ளிகூடத்துக்கு பக்கதில பெரிய அன்ரனாவோட பேஸ் இருக்கிறதெண்டு அவை பயப்படினம். அவேன்ர பயமும் நியாயமானதெண்டுதான் எனக்கும்பட்டது.  அதால இந்த பேசை எடுக்கவோ மாத்தவோ சொல்லிக் கேக்கத்தான் நானும் விதானையாரும் இந்த கூட்டத்தை இப்ப கூட்டின்னாங்கள்.

அதிபர் விசயத்தைச்சொல்லி முடிக்க விதானையாரும் அதே திருப்பிச் சொல்லி பேசை எடுக்க சொல்லி கேட்டார். தாமரை அக்கா எல்லாத்தையும் கேட்டிட்டு,

“நீங்கள் சொல்லுறதும், பயப்படுறதும் எனக்கு விளங்குது. இந்த ஊரில இந்த பேஸ் இருக்கிறது மிகவும் முக்கியமானது.  அந்த அன்ரனாவையும் அகற்ற ஏலாது.  ஆனா பேசை வேற இடத்தை மாத்திறதுக்கு வேணும் எண்டா நான் மேலிடத்தில கதைச்சுப்பாக்கிறன்.  டவர் ரேஞ்ச் கிடைக்கிற இடமா இருக்கோணும், மேலிடம் அனுமதிச்சா மட்டும் தான்  நான் இதை செய்யலாம்” என்றார்.

சனம் சலசலத்தது

மேலிடம் எப்ப முடிவு சொல்லும்? நீங்கள் மேலிடத்திட்ட கதைச்சு அவையும் ஓமென்டு சொல்லி நீங்கள் மாத்த முதல் கிபிரடிச்சு எங்கட பிள்ளையளுக்கு ஒண்டு நடந்தா என்ன செய்யிறது?

மெல்ல மெல்ல சலசலத்த சனத்திட்ட இருந்து இப்படி கூச்சல் குழப்பங்கள் ஏற்படத்தொடங்கிய போது ஆச்சி சட்டென்று எழுந்தாள்

“நிப்பாட்டுங்கோடா எல்லாரும்” ஏறக்குறைய ஆச்சி கத்தினாள்.

எல்லாரும் ஆச்சியின் சிம்மக்குரலினால் உறைந்து போய் நின்றார்கள்.

“என்னடா கதைக்கிறியள் எல்லாரும், எங்கட பிள்ளையள்  எங்கட பிள்ளையள்  எண்டு  சொல்லுறியள், அப்ப இதுகள் ஆற்ற பிள்ளையள்?”

ஒரு பக்கமாய் கையைக் கட்டிக்கொண்டு நின்ற இயக்கப்பெட்டையளை காட்டி கேட்டாள் ஆச்சி.

இதுகளும் எங்கட பிள்ளையள்தானடா. அதுகள் கிபிரடிச்சு செத்தா உங்களுக்கு பிரச்சினை இல்லை. உங்களுக்கு உங்கட சாமான் பத்திரமா கிடந்தா சரிதானே, எளிய நாயளே,  வாழ வேண்டிய வயசில அதுகள் ஏன்  தேப்பன் தாயை விட்டிட்டுவந்து   துவக்கோட கிடக்குதுகள்?

ஆச்சி ஆவேசமானாள்.

கலைவந்தால் ஆச்சி எப்படி மூர்க்கமாய் உறுமுவாவோ அப்பிடி ஒரு  காட்சியைதான் நான் கண்டன்.  சிலபேர் ஆச்சியோட சண்டைக்கு வந்தனர். பேசை மாத்தித்தான் ஆகோணும் எண்டு நெருங்கினார்கள்.  தாமரை அக்கா இந்த ஊர்தான் டவர் ரேஞ்சுக்க வருகுது, இடத்தை மாத்தினாலும் கட்டாயம் ஊருக்க தான் இருக்கும் எண்டு சொன்னா.  ஆச்சி

“என்ர வீட்ட தாறன் என்ர பிள்ளையளுக்கு,  என்ர வீட்டச் சுத்தி வெட்டையும் பத்தைக்காணியும் தான் கிடக்கு, என்ர நல்ல பெரியவீடு என்னோட வந்திருங்கோடி குமரியள்” எண்டு சொன்னாள்.,

என்ர அம்மா எணை உனக்கென்ன விசரோ எண்டு ஆச்சிக்கு ஏதோ சொல்ல வெளிக்கிட்டும் தான் பிடிச்ச பிடியிலயே நின்றா.  அண்டைக்கு கடைசியா ஆச்சியை மோட்டச்சைக்கிள்ள ஏத்திகொண்டுவந்து  வீட்டில இறக்கிச்சினம். ஏத்திக்கொண்டு வந்தது வேற ஆரும் இல்லை, ஆச்சிட்ட தமிழீழம் எப்ப கிடைக்கும் எண்டுகேட்ட  குறிஞ்சி அக்கா தான். ஆச்சியை இறக்கீட்டு அவாவை ஒருக்கா கட்டிப் பிடிச்சிட்டு போச்சினம்.  ஆச்சிக்கு கண்கலங்கீட்டுது. அவையளுக்கும்தான்.

கிபிரெண்டா எனக்கும் சரியான பயம்  கொஞ்சநாளைக்கு முதல்  காட்டுப்பக்கம்  இரவு நேரத்தில பரா லைட் அடிச்சு காட்டுக்க இருக்கிற ஏதோ பேசுக்கு கிபிர் அடிக்க இரைச்சல்ல ஊரே அதிர்ந்தது. முதல் கிளிநொச்சி பக்கம் கிபிர் அடிக்கேக்க மேலால போகேக்க அவ்வளவு இரைச்சலை நான் கேட்டதில்லை ஆனா அண்டைக்கு கேட்டாப்பிறகு சரியான பயம். செஞ்சோலையில செத்த அக்காக்களுக்கு அஞ்சலி செலுத்த அவேன்ர வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனவை.  எங்கட பத்தாம் வகுப்பு பெடியளும் ஏ எல் அண்ணாக்களோட போனம், அவை செத்தவீட்டில கிபிர் பற்றிக் கதைச்சத நான் கவனமா கேட்டுக்கொண்டிருந்தன். 

கிபிர் எல்லாம் இஸ்ரேல் தயாரிப்பாம்.  ஆளுயரத்துக்குக் குண்டு வச்சிருக்குமாம்.  டிலே குண்டு அடிச்சா பெரிய பங்கரக் கூட  துக்கி வெளியில போட்டுடுமாம். திருநகர்ல கிபிர் அடிச்சு தண்ணியே வந்திட்டாம். எயார் சொட் அடிச்சா வானத்திலையே குண்டு வெடிச்சு  பீஸ் தலைக்கு வருமாம். கிபிர் ஆமி ஒடுறேல்லையாம்  மேரி, சூட்டி எண்டு ரெண்டு வெளிநாட்டுப் பெட்டையள்தான் ஓடுறாளவையாம் , குறி தப்பாமல் குண்டு போடுறதிலை அவளவை கெட்டிக்காறியளாம்.

எண்டெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டனர். அடுத்த கிழமை ஆச்சீன்ர வீட்டுக்கு  பேஸ் மாறியது.  அம்மாட்ட போய் ஆச்சியை எங்களோட கூப்பிடச்சொன்னன், அம்மா ஆச்சிட்ட ஏற்கனவே கேட்டும் ஆச்சி வரமாட்டன் எண்டு சொல்லிப்போட்டா. நான் ஆச்சிட்ட போய் கேட்டன்.  நான் வரமாட்டன் என்ர வீட்ட விட்டிட்டு எண்டு சொன்னாள், இயக்கப்பெட்டையளிட்ட ஆச்சிய அனுப்புங்கோ எண்டு கேட்டன். அவர்களும் சொல்லிப்பார்த்தார்கள். ஆச்சி அசையவில்லை. எனக்கு கோபம் வந்திட்டுது

நீ என்ன இயக்கமோ , இஞ்ச கிடந்து சாகவோ போறாய்? எண்டு கேட்டன்.

நான் ஆச்சிட்ட அப்பிடி ஒருநாளும் கதைச்சதில்லை. ஒரு வேகத்தில குரல் உயத்தி கதைச்சிட்டன். ஆச்சி என்னில கோவப்படுவா எண்டு நினைச்சன் ஆனா ஆச்சி,

ஓமடா நான் இயக்கத்தில சேந்திட்டன், எடி குமரியள் என்னையும் சண்டைக்கு கூட்டிக்கொண்டு போங்கோ எண்டு உறுதியாச் சொன்னா

தாராளமா வாணை ஆச்சி, வயசுகூடின பெண் போராளி நீங்கள்தான் இனி.

சரி அப்ப எனக்கு என்ன இயக்கப்பேர்? ஆச்சி  குழந்தை மாதிரி சிரித்துக்கொண்டே கேட்டாள்.

நான் வைக்கிறன் எண்ட மலையரசி அக்கா ஏதோ யோசித்துவிட்டு

“இயற்கை ” என்றாள்.

ஆச்சிக்கு அந்தப் பெயர் பிடிச்சிருந்துது, நல்லா இருக்கடி ராசாத்தி என்றபடி  மலையரசியின் முகத்தைத் தடவி நெற்றியில் நெட்டி முறித்தாள்.

நான் வீரச்சாவெண்டால் என்ன ராங் குடுப்பியள்?

எனக்கு ஆச்சரியமா இருந்தது, ஆச்சிக்கு இதெல்லாம் எப்பிடித்தெரியும் எண்டு எனக்கு விளங்கேல, கோயிலும் வீடுமாத்தானே கிடக்கிறா எண்டு நினைச்சுக்கொண்டன்.  ஆச்சிக்கு எல்லாம் தெரியும், ஆச்சில சாமி வாறதெண்டு சின்னன்ல இருந்து அம்மா வெருட்டுவாள். ஆச்சின்ர பேச்சுக்கு எங்கட வீட்டில மறு பேச்சு கிடையாது.  அண்டைக்கும் அப்பிடித்தான் ஏதோ பலவருசம் பழகின மாதிரி அந்த இயக்கப்பெட்டையளோட கதைச்சுக்கொண்டிருந்த ஆச்சியை பாக்க ஆச்சிட்ட ஏதோ விஷயம் இருக்கு என்று எனக்கும் வியப்பாத்தான் இருந்தது.

அப்ப ஒரு அக்கா

ஆச்சிக்கு லெப்ரினன் கேணல்தான் என்று சொல்லிச் சிரித்தாள்.

பேஸ் இடம்மாற்றப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் ஆச்சி வீட்டுக்குப்பின்னால் அந்த பெரிய அண்டா கோபுரம் பொருத்தி நிறுத்திச்சினம்.   நாலஞ்சு இடத்தில பங்கர் வெட்டி  பெரிய   மரக்குத்தியள் போட்டு  பங்கர் அடிச்சினம்.  பழைய பேசில  பெரிய இஞ்சின் ஒண்டு இருந்தது.  அதை பெரிய டிப்பர்ல ஏத்த வேணும் எண்டு எல்லாரும் அண்டைக்கு பேசுக்குப் போனவை. நானும் பேசில நிண்டு  அந்த பெரிய எஞ்சினை ஏத்துறதை பாத்துக்கொண்டு நிண்டன். ஊரே அந்த இஞ்சினை  ஏத்துறத பாத்துக்கொண்டு நிண்டது.  ஆச்சியும் வெண்ணிலா, கலைமதி, தமிழழகி  நாலுபேரும் ஆச்சி வீட்டில நிண்டவை. அவைக்கு அண்டைக்குச் சாப்பாடு செய்யிறவேலை.  ஆச்சிக்கும் இப்ப பேசில சாப்பாடு. ஆச்சிக்கெண்டு பிறிம்பா சைவம் காய்ச்சச் சொல்லி தாமரையக்கா ஓடர் போட்டிருந்தா.  மதியம் தாண்டி விட்டது. இஞ்சின் ஏத்தியாச்சு.  மிச்சம் இருந்த  இரும்புச்சாமான்கள், பலகையளையும்  வாகனத்தில ஏத்தச்சொல்லி  தாமரையக்கா சொன்னா.  பெட்டையள் வெயில் ஏறக்கிடையில் ஏத்தி முடிக்கோணும் எண்டு சுழண்டு சுழண்டு வேலை செய்திச்சினம்.  நான்  எல்லாத்தையும் பாத்துக்கொண்டு நிண்டன். ஏத்தாம கிடந்த பூக்கண்டுச்சாடியளை வீட்ட தூக்கிக்கொண்டு போவமோ எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்கேக்கதான் அந்தச் சத்தம் கேட்டுது. ஒருக்கா பூமி குலுங்கிச்சுது.  ஆரோ வீறிட்டு கத்திறசத்தம் கேட்டது.

எல்லாரும் ஆச்சி வீட்டுப்பக்கம் பாத்தம், அப்பத்தான் கிபிர்ச்சத்தமே கேட்க தொடங்கிச்சு.

பொம்

இரண்டாவது சத்தம் இன்னும் அதிகமாய் எங்களைக் குலுக்கியது. எல்லோரும் விழுந்து படுத்தோம்.  சிலர் பங்கருக்குள் உருண்டு போய்க் குதித்தனர். நான் நிமிர்ந்து பார்த்தேன். முதல் குண்டு விழும்போது ஆச்சிவீட்ட இருந்த கோபுரம் அப்பிடியே இருந்தது, ரெண்டாவது குண்டுக்கு கோபுரம் சரிந்துவிழ பெரிய கறுப்புப் புகைமூட்டம்  வானத்துக்கு எழும்பினத நான் பாத்தன். எனக்கு  நெஞ்சு அடைச்சுது. அப்பிடியே நினைவு மங்கிப்போக நான் மயங்கிப்போனன்.

ஆரோ என்ர முகத்தில தண்ணியை அடிச்சினம். என்ர உள்ளங்கால ஆரோ தேய்க்கிற மாதிரி இருந்தது  முகமும் நெஞ்சும் குளிருற மாதிரி இருந்தது.  ஆரோ  காதுக்குக் கிட்ட ஒப்பாரி வைக்கிற சத்தம் கேட்டுது. நான் செத்துப்போனனோ எண்டு நினைச்சன். ஆனா கண் திறபட்டுது.  என்ர கால்மாட்டில அக்கா இருந்து காலை தேய்ச்சுகொண்டு இருந்தாள்.  அம்மா என்ர தலைமாட்டில கிடந்து ஒப்பாரி வைச்சுக்கொண்டு  இருந்தாள்.  என்னைச்சுற்றி நிறைய  உருவங்கள் தெரிஞ்சுது. நான் செத்துத்தான் போனன் எண்டு நினைச்சன். அம்மான்ர ஒப்பாரி கேட்டுது என்னிடம் தான் சொல்லி கதறினாள்

அப்பு ஆச்சி செத்துப் போனாடா…. ஐய்யோ.. ஐய்யோ என்று அம்மா  குழறினாள்.

எனக்கு மூச்சடைத்தது. யாரோ என்னை எழுப்பி உட்கார வைத்தார்கள்,  பக்கத்து வீட்டுக் கபிலன் எனக்குப் பக்கத்தில வந்து,

ஆச்சியும் வெண்ணிலாக்காவும்  செத்திட்டினம்.  கலைமதிக்கு கால் இல்லை, தமிழழகிக்குக் கையில காயம் என்று சொன்னார்.  பங்கருக்க ஆச்சி மூண்டு பேரையும் கட்டிப் பிடிச்சிட்டாவாம். வந்த பீஸ் ஆச்சியையும் வெண்ணிலாவையும்  வெட்டிட்டு, அடியில கிடந்ததால மற்ற ரெண்டு பேரும் உயிர் தப்பிட்டினம் எண்டு ராகுலன் எனக்கு பக்கத்தில வந்து சொன்னான். ஊரே அங்க கூடியிருந்தது.

இரவு பத்துமணிக்கு ரெண்டு பொடியும்  பொதுநோக்கு மண்டபத்துக்கு வந்தது. வெண்ணிலாக்கான்ர வித்துடல் வரி உடுப்புப் போட்டு போட்டோவும் மாலையுமா வந்தது.  அவான்ர நெஞ்சில  புலிக்கொடி போர்த்தி இருந்தினம்.  ஆச்சின்ர நெஞ்சில  நிறைய பூ. ஆச்சி சீலை கட்டி இருந்தா.  திருநீறு படையா இழுத்திருந்தா.  வெண்ணிலாக்கா மாதிரி ஆச்சிக்கு முகம் கறுக்கேல, எப்பவும் போலதான் ஆச்சி இருந்த மாதிரி இருந்தது.  ஆனா ஏதோ ஆச்சில குறையிற மாதிரி இருந்தது, அப்பதான் அது நடந்தது!  குறிஞ்சியக்கா ஒரு சின்ன புலிக்கொடிய எடுத்துக்கொண்டு வந்து ஆச்சிக்கு மேல போத்திவிட்டா. ஆச்சின்ர நெஞ்சில அந்த பாயிற புலி அப்பிடியே படிஞ்சுது.  குறிஞ்சியக்கா குனிஞ்சபடி நின்றிருந்தா. அவான்ர  கண்ணில இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் லெப்ரினன் கேணல் இயற்கையின் வித்துடல் மீது விழுந்தது.

Related posts

Tuvia Ruebner – தமிழில் – இ.ரமணன்

editor

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம்

editor

கிணறு -ஷமீலா யூசுப் அலி

editor

Leave a Comment