Image default
ஆக்கங்கள்

விஞ்ஞானமும் அகராதியும் : பதிப்புகள் பற்றியும் கட்டுரை பற்றியதுமான உரையாடல்

புதிய சொல்லின் மூன்றாவது இதழில் நாம் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய விஞ்ஞானமும் அகராதியும் என்கிற கட்டுரையை மீள்பிரசுரம் செய்ததுடன், இவ்வாறான மீள்பிரசுரங்களின் தேவையையும் மீள் உரையாடல்களையும், மதிப்பீடுகளையும் வலியுறுத்தியிருந்தோம்.  அந்த விதத்தில் இந்தக் கட்டுரைக்கு விருபா குமரேசன் அவர்கள் ஆற்றியிருக்கின்ற எதிர்வினையானது மிகவும் முக்கியத்துவமானதாகவும் உற்சாகமளிப்பதாகவும் அமைகின்றது.  ஆய்வுக்கட்டுரைகளுக்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பார்வை, பிரக்ஞை, பரந்த தேடல் ஆகியவற்றை இந்த எதிர்வினையின் ஊடாக நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன், எந்த ஆய்வுக்கட்டுரைகளும், ஆய்வாளர்களும் புனித உருக்கள் அல்ல, அவை காலத்துக்குக் காலம் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட வேண்டியன என்பதாகவும் இக்கட்டுரை முன்வைக்கின்றது.  தவிர, நாம் தொடர்ச்சியாக குறைபட்டுக்கொள்ளுகின்ற பதிப்புத்துறை வளர்ச்சிபெறாத ஒரு எமது சமகாலச் சூழலின் தாக்கத்தையும் முறையான பதிப்பாளர், பிரதி மேம்படுத்துனர் ஆகியோரின் தேவையையும் இதனூடாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்த அடிப்படைகளில் ஒரு முக்கியமான உரையாடலுக்கு இந்த எதிர்வினையானது களம் அமைத்துக்கொடுத்திருக்கின்றது

-புதிய சொல் 

1. விஞ்ஞானமும் அகராதியும் பதிப்புகள்

      பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினால் நடத்தப்படும் இளங்கதிர் ஆய்விதழின் பத்தாவது ஆண்டுமலரில்  (14.04.1958) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரை முதன்முதலாக  இடம்பெற்றது. இம்மலரின் ஆசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். அம்மலரின் 145 – 154 பக்கங்களில் இவ்வாராய்ச்சிக் கட்டுரை இடம்பெற்றபோது, அது 27 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் காணப்பட்டது. இதனையே நாம் முதலாவது பதிப்பாக எடுத்துக்கொள்கிறோம்.

      ஏப்ரல் 1962 இல், செ.கணேசலிங்கன் அவர்களின் பாரதி புத்தகசாலை வெளியீடு – 1 என்ற அடையாளத்துடனும், சென்னையில் பாரிநிலையத்தின் விற்பனை உரிமையுடனும் சென்னையில் பதிப்பிக்கப்பட்ட ஈழத்து வாழ்வும் வளமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் பதினோராவது கட்டுரையாக 106 – 116 பக்கங்களில் விஞ்ஞானமும் அகராதியும் இடம்பெற்றது. இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்தவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் என்பதை நூலின் முன்னுரை பெருமையாகச் சுட்டுகிறது. இந்நூலில் இக்கட்டுரையானது 26 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் உள்ளது. இதனை இக்கட்டுரையின் இரண்டாம் பதிப்பாகச் சொல்லலாம்.

      புதிய சொல்லின் மூன்றாவது இதழ் வரை (2016 ஜூலை – செப்டம்பர்) பத்துத் தடவைகளுக்கு மேல் இவ்விரண்டாம் பதிப்புக் கட்டுரையே பல்வேறு இடங்களில் இடம்பெறுகிறது.

2. இரண்டு பதிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன ?

      இளங்கதிரில் வெளியான பதிப்பின்படி, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 19வது பந்தியில் உள்ள நான்கு வரிகளூடாக நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ் அகராதிப்பணியினையும், அதனைத்தொடர்ந்து வரும் 20, 21 ஆகிய இரு பந்திகளிலுள்ள முப்பத்தொரு வரிகளுடாக கு.கதிரவேல்பிள்ளை அவர்களின் அகராதிப்பணியினையும் எழுதியிருந்தார்.

      ஈழத்து வாழ்வும் வளமும் நூலில் மேலே படத்தில் நிறமிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டு குறித்த 19வது, 20வது பந்திகள் இணைக்கப்படுவதன் மூலம் கு.கதிரவேல்பிள்ளை அவர்களும், அவரது அகராதிப்பணியும் மறைக்கப்படுகிறது, நா.கதிரைவேற்பிள்ளை வட்டுக்கோட்டைச் செமினரியின் மாணாக்கராக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்து அகராதி உருவாக்கியவராகக் காட்டப்படுகிறார்.

3. 54 ஆண்டுகளாகத் தொடரும் பதிப்பு வேறுபாடு

      பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் ஈழத்து வாழ்வும் வளமும் நூல்வடிவம் பெற்றுள்ளது. தொடர்ந்து குமரன் புத்தக இல்லத்தினால் 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் மீள்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. மீள்பதிப்புகளுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மீள்பதிப்புக்கான முன்னுரைகளையும் எழுதியுள்ளார். 2016 பதிப்பில் ஈழநாட்டில் விஞ்ஞானமும் அகராதியும் என்ற புதியதலைப்புடன்,  உபதலைப்புகளுடன், படங்களுடன் வெளியாகியுள்ளது.

0001_1958_04_14_Ilankathir_Page_151_with_highlight      இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் பலரை உருவாக்கியவராகவும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் தோற்றுவித்த புலமைப் பாரம்பரியமே அவரின் மிகப் பெரிய சாதனையாகவும் பேசப்படும் நிலையில், பேராசிரியர் அவர்களின் மாணவர்களான வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தில்லைநாதன், சண்முகதாஸ், தனஞ்சயராசசிங்கம் போன்ற எவருடைய பார்வைக்கும் பதிப்பு வேறுபாடு தென்படவில்லையென்பதும், திருத்தப்படவில்லையென்பதும் வியப்பானதாகவே உள்ளது.

      புதிய சொல்லில் எழுதப்பட்ட அறிமுகத்தில் சொல்லப்பட்டது போல் “இவரிடமிருந்த புறவயமாக விடயங்களை அலசி ஆராய்கின்ற பண்பு இவர் மாணவர்களிடமும் தொடர்ந்தது” என்பதும், பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் குறிப்பிடும் “பல்கலைக்கழக ஆசிரியர் என்ற முறையிலே பரந்த நோக்கினையும் உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும் விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைதேடத் தூண்டுபவராகவும், புதிய கருத்து வெளியீடுகளின் பால் மாணவரை ஆற்றுப் படுத்துபவராகவும் திகழ்ந்தார்” என்பதும் மீள் உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.

      ஈழத்து வாழ்வும் வளமும் (2001 பதிப்பு) நூலில் இக்கட்டுரையினை 2006 இல் நான் முதன் முதலாகப் படித்து முடித்தவுடன், என் மனதில் தோன்றிய கேள்வி அகராதி தந்த ஈழத்தவர்களான வைமன் கதிரைவேற்பிள்ளையும், நா.சி.கந்தையா அவர்களும் ஏன் இடம் பெறவில்லை என்பதே, தொடர் தேடலில் கிடைத்தவைகள்தாம் இக்கட்டுரையினை எழுத உதவியவை. 

4. பாடத்திட்டத்தில் விஞ்ஞானமும் அகராதியும்

      2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தரம் 12 இற்கான இரண்டாம் தவணைக்குரிய கட்டுரைப் பகுதியில் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவ குழுவில் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், திரு து.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.யோகராஜா, கலாநிதி வ.மகேஸ்வரன், திரு கே.இரகுபரன், திரு மொஹமட் ரமீஸ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பேராசிரியர் சி.தில்லைநாதனும், பேராசிரியர் அ.சண்முகதாஸும் பேராசிரியரின் புலமைப் பாரம்பரிய மாணவர்கள்.

      இதன் தொடர் நிகழ்வாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வழிகாட்டி நூல்களிலும், கைநூல்களிலும் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் இரண்டாம் பதிப்பே இடம்பெற்றுள்ளது. இவ்வழிகாட்டி நூல்களின் ஆசிரியர்களின் அவசரமும், தமிழ்ப் புலமையின் தெளிவு வெளிப்படும் இடமாகவும் இது அமைகிறது.

எண்தலைப்புஆசிரியர்ஆண்டு
1.க.பொ.த உயர் தரம் தமிழ் தரம் – 12புலவர் இளங்கோ2009
2.கட்டுரை மலர் தரம் 12 – 13கவிஞர் த.துரைசிங்கம்2010
3.கட்டுரைத் தொகுப்பு தரம் 12 – 13கவிஞர் த.துரைசிங்கம்2010
4.க.பொ.த உயர்தரம் உரைநடைக்கோவை கட்டுரைகளும் வினாவிடைகளும்த.அஜந்தகுமார்2011

      பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவக் குழுவில் உள்ளவர்கள் கட்டுரையைப் பரிந்துரைக்கும்போது அதன் போதாமைகளை அறியவில்லை, ஏன் ஆராயவில்லை என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக ஈழத்தவர்களின் அகராதி முயற்சிகள் பற்றி இதனைவிட வேறு இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் இல்லையா என்பதும் உரையாடப்படவேண்டும்.

      58 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதை இற்றைப்படுத்தாமல் இன்றைய தலைமுறை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் ஊடாக கொடுப்பதன் மூலம் கடந்த 58 ஆண்டுகளில் ஈழத்தின் தமிழ் அகராதித் துறை எந்த இடத்தில் / எந்த நிலையில் உள்ளது தொடர்பிலான ஆய்வுகள் / கட்டுரைகள் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஒன்று எனவும் எடுத்துக்கொள்ள இடமுள்ளது.  இற்றைப்படுத்தப்படாத இக்கட்டுரையின் மூலம் ஞானப்பிரகாசரின் வேர்ச்சொல் அகராதிச் சேகரங்களின் துணையுடன் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 களில் வெளியிட்ட தாவீது அடிகளாரும், தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து அகராதிகளை வெளியிட்டவருமான ந. சி. கந்தையா பிள்ளை அவர்களும்  இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே விடப்பட்டுள்ளார்கள்.

5. விஞ்ஞானமும் அகராதியும் – முதற் பதிப்பை அலசுதல்…

      இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்பதை 25வது பந்தியில் கட்டுரையாளரே சொல்கிறார். இளங்கதிர் என்ற ஆய்விதழில் இது வெளியாகி உள்ளது, குறித்த இதழின் ஆசிரியர் கட்டுரையாளரின் மாணவர்  ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். இது உண்மையில் 1950களில் நிலவிய அறிவுத்தள மட்டத்தில், அவசர கோலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. பல தவறுகளும், போதாமைகளும், விடுபடல்களும் இதன்கண் உள்ளன. தவிரவும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் பெருவிருப்பிற்குரிய நாடகவியல், சாசனவியல், நாட்டாரியல் என்ற எல்லைக்கு வெளியே அமைந்த கட்டுரை. தனது விருப்பிற்குரிய பகுதியில் பேசப்படும் நிலையில் சிறப்பாகப் பணியாற்றிய பேராசிரியர், தமிழ் அகராதியியல் என்ற துறையில் போதிய கவனமும், ஆழமான அறிவும் கொண்டிருக்கவில்லை என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது.

      தமிழ் அகராதியியலின் அறிவியல் கூறுகள் எதையும் பேராசிரியர் இக்கட்டுரையில் கூறவில்லை. தலைச் சொற்களை (Head Words) அடுக்கும் முறை, பொருள் விளக்கச் சொற்களை அடுக்கும் முறை, தமிழில் எத்தனை வகைகளில் சொற்களை அடுக்கும் முறைகள் உள்ளன, ஈழத்தில் எழுந்த அகராதிகள் அல்லது ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகளில் எந்த முறையில் சொற்களை அடுக்கியிருந்தார்கள், இது எந்த வகையில் தமிழகத்தில் எழுந்த அகராதிகளில் காணப்பட்ட சொற்களை அடுக்கும் முறையில் இருந்து வேறுபட்டிருந்தது, சொற்களை அடுக்குவதற்கு எது சிறந்த முறை, ஐரோப்பியர்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில் எந்த அடுக்குமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள், அவை தமிழ் எழுத்துக் கட்டமைப்பின் தன்மைக்கு ஏற்றனவா போன்ற அலசல்கள் எதுவும் இதில் இல்லை.

      உண்மையில் கடந்த காலத்தில் ஈழத்தில் எழுந்த அகராதிகள் \ ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அகராதிகலைக்கூறுகள் பலவுண்டு. அவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் எடுத்துக்கூறாமலும் அலசாமலும், அகராதித்துறையில் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றது என்று எழுதுவது பலவீனமான ஒன்றாகவே நான் கருகிறேன்.

      தவிரவும் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல மூல அகராதிகளை, புத்தகங்களை நேரடியாகப் பேராசிரியர் பார்வையிடவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

· 5வது பந்தியில் சாமுவேல் பிஷ் கிறீன் (Dr Samuel Fish Green) என்பதாகக் குறிப்பிடுகிறார். Dr Samuel Fisk Green என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயரை, அதுவும் மீன் என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். ஒரே ஒருமுறையாவது ஏதாவது ஒரு புத்தகத்தில் டாக்டர் கிறீன் அவர்களின் ஆங்கிலப் பெயரைப் பார்வையிட்டிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. (இன்றும்,  பேராசிரியரின் இக்கட்டுரையை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஈழத்து அகராதி தொடர்பில் கட்டுரைகள் எழுதும் சிலர்  Dr Samuel Fish Green என்றே எழுதிவருகிறார்கள்.)

· 10வது பந்தியில் ஞானச் சகோதரர் பிலிப்பு 1905 ம் ஆண்டு அளவை நூலொன்றை வெளியிட்டனர். – இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.

· 10வது பந்தியின் இறுதியில் சின்னத்தம்பி என்பார் நில அளவை சாத்திரத்தைப் பழைய இலக்கண முறைப்படி சூத்திரங்களால் யாத்து ஒரு நூலை வெளியிட்டனர். – இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.

· 13வது பந்தியில் பண்டிதர் சந்திரசேகரம் என்பார் ஒரு கையகராதியை ஆக்கினார். – இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை. அட்டையில் உள்ள A Manual Dictionary of the Tamil language என்பதையோ உட்புறத்தில் தமிழில் குறிப்பிடப்படும் பெயரகராதி என்பதையோ குறிப்பிடவில்லை.

· 14வது பந்தியில் உள்ள அவர் அதனை வரிசைப்படுத்தி நூல் ஆக்கினார் அது 1842ம் ஆண்டு வண எம்.வின்சிலோவால் வெளியிடப்பட்டது. – இதிலும் குறித்த நூலின் தலைப்பான English and Tamil Dictionary : contains all the more important words in Dr Webster’s dictionary of the English Language என்பதைத் தரவில்லை.

· 15வது பந்தியில் குறிப்பிடும் தமிழ்-ஆங்கில அகராதியின் தலைப்பான A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil என்பது தரப்படவில்லை.

· 19வது பந்தியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் ஓர் அகராதியை 1905ம் ஆண்டு வெளியிட்டனர். – இதிலும் குறித்த அகராதியின் தலைப்பைத் தரவில்லை, இவ்வகராதியையும் பேராசிரியர் பார்வையிடவில்லை என்றே நினைக்க இடமுண்டு. தவிரவும் சதாவதானியின் தமிழ்ப் பேரகராதியானது 1899 இல் வெளியாகியுள்ளது, ஆனால் பேராசிரியர் 1905 என்பதாகக் குறிப்பிடுகிறார். அகராதியின் தலைப்பையும் தராது, வெளியான ஆண்டும் சரியாகக் குறிப்பிடாமல், ஆனால் அது பிழையில்லாது தூயதாய் வெளிவந்தது என்ற சான்றிதழை எங்ஙனம் வழங்கிடமுடியும் ?

·   24வது பந்தியின் பிற்பகுதியில் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இதுகாறும் தமிழ் அகராதி ஆக்குவோர் கைக்கொள்ளாத முறையில் ஓர் தமிழ்-ஆங்கில அகராதியை ஆக்க முயன்றார். –  இங்கும் குறித்த அகராதியின் தலைப்புத் தரப்படவில்லை, மேலும் An Etymological and Comparative Lexicon of the Tamil Language என்ற தலைப்புடைய இவ்வகராதியின் 6 பகுதிகள் முறையே 1938, 1940, 1941, 1943, 1944, 1946 ஆகிய ஆண்டுகளில், சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பேராசிரியர் சில பாகங்களை 1935 ம் ஆண்டு அச்சிட்டும் வெளியாக்கினார் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.

·     23வது பந்தியில் நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் ஆங்கில ஆங்கில தமிழ் அகராதியின் பதிப்பு ஆண்டு 1911 என்று தவறாகக் கொடுத்துள்ளார், உண்மையில் அவ்வகராதி 1907 இல் வெளியாகியுள்ளது.

      இதுகாறும் பேராசிரியர் குறிப்பிடாதுவிட்ட அகராதித் தலைப்புகளையும், வெளியான ஆண்டு விபரங்களில் உள்ள மாறுதல்களையும்  நோக்கினோம்.

      15, 16வது பந்திகள் வண எம்.வின்சிலோ அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி பற்றியது. அதில் “இதுகாறும் வெளிவந்த அகராதிகளில் வெளிவராத பல முறைகள் அங்குள்ளன” என்பதாக மட்டுமே கூறியுள்ளார். அவை என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை.

      16வது பந்தியினூடாக

1. ”நூலாசிரியர், புலவர், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள், தேவர் ஆகியோரின் பெயர் முதலியவையும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன” ,

2. ”தமிழரின் சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் ஆகியன பற்றியுள்ள செய்திகளையும் அறிந்துகொள்ளலாம்”

என்று கூறிவிட்டு, 17வது பந்தியில் “ஆகவே கிறிஸ்து சமயத்தைப் பரப்புவதற்கு ஒரு கருவி நூலாக எழுந்தபோதும் ஈற்றில் யாவருக்கும் பயன்படும் ஒரு பெருநூலாக அது முடிந்தது என்றவாறு கூறுகிறார். இதில் எவ்வளவு இரு துருவ வேறுபாடு ? கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான கருவி நூலென்று குறிப்பிட்டுக் குற்றம் சாட்டும்போது, அதற்கான ஆதார உள்ளடக்கப் பதிவுகளைக் எடுத்துக் கூறவேண்டாமா ?

      வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary – தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இதில் அ தொடக்கம் அனோர் வரையிலான 7967 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள்  உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியானதாகும். 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியான வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதியில் வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய முன்னுரையின்படி அவர் இதனை 6 தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளதாக அறியமுடிகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் அகராதித் தொகுப்புச் சேகரங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திடம், வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களின் மகன் க.பாலசிங்கம் அவர்களாற் கொடுக்கப்பட்டு, அன்றைய காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பிலிருந்த தமிழ் வித்துவான்களின் துணையுடன் 1910, 1912, 1923 ஆகிய ஆண்டுகளில் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary – தமிழ்ச் சொல்லகராதி என்ற பெயரிலேயே மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கம் இதனை வெளியிட்டிருந்த காரணத்தினால், இது பலராலும் தமிழ்ச்சங்க அகராதி என்று அழைக்கப்பட்டுள்ளது. (தகவலுக்காக –  1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் மூன்று பாகங்களும் மீள் அச்சுச் செய்யப்பட்டபோதும், தொடர்ந்தும் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary – தமிழ்ச் சொல்லகராதி  என்ற பெயரிலேதான் வெளியிடப்பட்டுள்ளது.)

      விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் 20, 21 வது பந்திகளூடாக வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதி பற்றிய விபரிப்புகள் உள்ளன. ஆனால் பல தவறுகளும் விடுபடல்களும் உள்ளதாகவே அதுவும் உள்ளது. 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட அகராதி பற்றிய செய்தி இல்லை. அது சங்க அகராதி என்ற பெயரோடு வெளிவந்தது என்று தவறான தகவலையே பதிவு செய்கிறார். தவிரவும் 1910 இல் முதற் பாகமும், 1923 இல் மற்றைய இரண்டு பாகங்களும் வெளிவந்தனவென்று, பதிப்பு ஆண்டையும் தவறாகவே குறிப்பிடுகிறார். இதனால் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையவர்கள் குறித்த அகராதியைப் பார்வையிடவில்லை என்ற ஒரு தோற்றப்படாடு ஏற்பட்டாலும், 1904 இல் வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் தனது முன்னுரையிற் குறிப்பிட்ட அதே வாசகங்களை உள்ளடக்கி “மிகச் சிறந்த தமிழ் அகராதி எதுவும் தற்பவமாகவோ, தற்சமமாகவோ சங்கத மொழியிலுள்ள சொற்களை உள்ளடக்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இக்குறைபாட்டைத் தவிர அவர் அகராதி ஏனைய வகையிற் சிறந்து விளங்கிற்று“ என்றும் குறிப்பிடுவதனூடாக அவர் குறித்த அகராதியைப் பார்வையிட்டுள்ளார் என்ற முடிவிற்கும் வர இடமுள்ளது. தவிரவும் ஈழத்துக் குழூஉ இறையனாராக அறிவியலும் அகரமுதலியும் என்ற தலைப்பிலான கட்டுரையெனில் இக்குறைபாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும், ஆனால் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் இவ்வாறான குறைபாடு கூறுவது முரண்நகையாகும். (விஞ்ஞானம் என்பது தமிழ்ச்சொல்லல்ல. | ஈழத்துக் குழுஉ இறையனார் என்பது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் புனைபெயர், தனித்தமிழ் எண்ணக்கருவில் அமைந்த பெயர்.)

      வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதி (முதலாம் பாகம்) என்ற பெயரில், 1904 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அகராதி வெளிவந்ததென்பதை மறைத்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருமை சேர்க்குமாறு செயற்படவேண்டிய காரணம் என்னவென்றும் ஆராயவேண்டிய ஒன்றாகும்.

      26வது பந்தியில் காணப்படும் “தமிழ் நாட்டில் நிகண்டுகள் எழுந்தன” என்ற வாசகமானது, ஈழநாட்டில் எழுந்த நிகண்டுகளான,

            1. 1876 சிந்தாமணி நிகண்டு – வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை,

            2. 1889 நேர்ச்சொல் நிகண்டு – புலோலி சதாசிவம்பிள்ளை

ஆகியவற்றை பேராசிரியர் அறிந்திருக்கவில்லை, அதாவது ஈழத்தில் நிகண்டுகள் தோன்றியுள்ளவென அறிந்திருக்கவில்லை என்பதனாலேயே அவர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்.

6. ஈழத்தில் அகராதித்துறையின் இன்றைய நிலை

      இலங்கைத் தீவில் பேசப்படும் மற்றொரு மொழியான சிங்கள மொழியின் அகராதித்துறை எவ்வாறு தோற்றம் பெற்றது, இன்று எவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை http://www.dictionary.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta இணைப்பினூடாகத் தமிழில் பார்வையிட முடிகிறது. 1845 இல் ஆரம்பிக்கப்பட்ட றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக்கிளையில் இருந்து இன்றைய சிங்கள அகராதி அலுவலகம், அதன் படிமுறை வளர்ச்சி, அண்மைக்கால அவர்களது அகராதி வெளியீடுகள் வரை அறிந்துகொள்ள முடிகிறது.

      இதே நிலையில் தமிழில் அகராதித்துறைக்காக எந்தவொரு நிறுவனமும் தோற்றம் பெற்றதாகவோ செயற்பட்டதாகவோ தகவல்களில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அகராதியியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு களம் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் மொழியியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் என்று ஒரு சிலரைக்குறிப்பிட முடியும். ஆனால் lexicography என்ற அகராதியியல் துறையில் துறை போக்கிய தொடர் செயற்பாட்டாளர், அறிஞர் என்று பெயர் குறிப்பிடும்படி எவரும் இல்லை என்ற உண்மையை கசப்புடன் ஒத்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. ஈழத்தில் கடந்த காலங்களில் கோலோச்சிச் சாதனை படைத்த கல்வித்துறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் அகராதித்துறையை கவனத்தில் கொள்ளாதுவிட்டது கவலைக்குரிய விடயமே. 2005 இல் வெளியான ஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள் என்ற அகராதியைத் தந்த பேராசிரியர் சுபதினி ரமேஷ் அவர்கள் நீங்கலாக இன்றளவும் ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் யாவும் கல்வித்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

      நானறிந்தவரையில் 200 இற்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்ட்ட ஒரு நூல் ஈழத்து வாழ்வும் வளமும். இன்றும் அதன் தேவை இருக்கிற காரணத்தினாற்றான் நான்காவது பதிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தின் அகராதி முயற்சிகள் தொடர்பில் கட்டுரை வரையும் எவருமே இக்கட்டுரையை மேற்கோள் காட்டத்தவறுவதில்லை. ஆனால் யாருமே இக்கட்டுரையின் போதாமைகளை, தவறுகளைப் பொதுவெளியில் சுட்டி எழுதவில்லை.

      பாடத்திட்டத்தில் கட்டுரை இணைக்கப்பட்ட காரணத்தினால் இலங்கை முழுவதும் உள்ள தமிழாசிரியர்கள், குறிப்பாக தரம் 12-13 இற்குப் பாடம் சொல்லித்தரும் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையைக் கற்பிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை ஆசிரியர்கள் கட்டுரையின் குறைபாடுகளைத் தெரிந்துகொண்டார்கள் ? பொதுவெளியில் அல்லது தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்கள் ? என்பதும் அறியமுடியவில்லை.

      மேலும் இக்கட்டுரையினைப் பாடத்திட்டத்திற் பரிந்துரைத்த பெருந்தகை யாரென்பதைத் தெரிந்து கொள்வதற்காக தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவை (http://nie.lk/pages/dept12.asp) மின்-அஞ்சலில் 2016 ஜனவரியில் தொடர்புகொண்டபோதும், இன்றுவரை பதில் இல்லை.

      இந்நிலையில் புதிய சொல் மீள் உரையாடல்களுக்குக் களம் அமைத்துள்ளதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறாக கடந்த காலங்களில் வரையப்பட்ட பல விடயங்கள் மீள் உரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையின் மீள் உரையாடல் என்ற நிலையில் இருந்து ஈழத்தின் அகராதித்துறைச் செயற்பாடுகள், பதிவுகள் நோக்கிய மீள் உரையாடலாக மாற்றப்படுமாயின் சிறப்பானதாக அமையும் என்ற என் பெருவிருப்பையும் இத்தால் பதிவு செய்கிறேன்.

      எங்கடை புறெபசர் என்ற அன்பிழையினைவிட எங்கள் மொழி, அறிவியல்பூர்வமான அணுகுமுறை என்பது ஆழமனது, அகலமானது. எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார் என்ற வீண் தற்பெருமைகளைத் தவிர்த்து களநிலையறிந்து, யதார்த்த உண்மைகளுடன் உரையாடுவதே, தொடர்வதே சிறப்பானதாகும்.

      – விருபா குமரேசன் (t.kumaresan@viruba.com)

Related posts

இந்திரவிழா – பண்பாட்டிலிருந்து இயற்கைக்கு

editor

அல்லது பெருஞ்சிரிப்பு – பா. அகிலன்

editor

அரசியல் கிரிக்கெட் – அருண்மொழிவர்மன்

editor

2 comments

Leave a Comment