Image default
ஆக்கங்கள் கட்டுரை

அறம் செய விரும்பும் சொற்கள் ; பார்த்திபனின் கதை தொகுப்பை முன்வைத்து

நம் மனதிற்கினிய பெரும்பாலானவற்றை பிரியநேர்ந்த கதை நம் எல்லோரிடமும் உள்ளது. ஓர் அடிவளவு நாவலோ, சைக்கிளின் அரவத்துக்குத் துள்ளித்தாவுகின்ற ஜிம்மியோ, வானவில் கனவுகளால் எண்ணங்களை நிரப்புகிற குடைவெட்டுப்பாவாடையொன்றின் விளிம்புகளோ, மடிப்புக்கலையாத முழுக்கைச்சட்டையின் நேர்த்தியோ, குளத்தடியோ, கடைத்தெருவோ ஏதோ ஒன்று நம் எல்லோருடைய இதயத்திலும் பிரதியிடப்படமுடியாத நினைவுகளால் நிரம்பியிருக்கிறது. புலப்பெயர்வின் இரண்டாம் தலைமுறை தோன்றத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் நனவிடை தோய்தலின் அவாவும் கனதியும் தேய்ந்தடங்கிவருகிறது அல்லது அது குறிப்பிட்ட முதல் தலை முறைக்குரியதாக மட்டும் மட்டுப்படத்தொடங்கியிருக்கிறது. நம் திருவிழாவையும் கொண்டாட்டத்தையும் ஏன் நம் மொழியையும் கூட அடுத்த தலைமுறையிடம் கொடுப்பதற்குத் திணறி வருகிறோம். நாம் இன்றைக்கிருக்கிற தஞ்சமடைந்த நிலத்தை தன் சொந்த நிலமாகக் காணுகின்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டிருக்கிறது. இந்த வகையில் மெல்ல மெல்ல இந்த ஈழத்தமிழ்ச் சமூகம் தன்னை புலம்பெயர் நிலத்தில் ஊன்றிக்கொள்ளும் செயன்முறையைப் பதிவுசெய்யும் கதைகளாகவே பாரத்திபனின் கதைகளை நான் காண்கிறேன். மத்திய கிழக்குப்பயணத்தில் தொடங்கி ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களையடைந்த ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வின் ஆரம்பநாட்களை பார்த்திபனின் சொற்கள் படைக்கின்றன. இடைநடுவில் கைவிட்டுச் செல்கின்ற ஏஜென்சிக்காரர்களை, நாடுவிட்டு நாடுதாவி அடையாளமற்று இறந்துபோன மனிதர்களை, இழவையும் தொழிலாக்கிச் செழித்த மனிதர்களை பார்த்திபனின் கதைகளில் காணலாம். புலப்பெயர்வின் வரைபடத்தை தன் சொற்களின் வழி எழுதிச்செல்லும் கதை சொல்லி அவர்.

பார்த்திபனை நான் நேரடியாக அறிந்தவனில்லை. ஒரு சொல்லுத்தானும் தொடர்புச் சாதனங்களின் வழியேனும் பேசியவனில்லை. ஆனால் பார்த்திபனை நான் அறிந்தேயிருந்தேன். அவரது நண்பர்கள் வழி. அவரது சமூகச் செயற்பாடுகள் வழி. பார்த்திபன் குறித்த சித்திரமொன்றை நான் உருவாக்கிவைத்திருந்தேன். அந்தச்சித்திரம்  நான் கதை தொகுதியைப் படிக்கும் போது தன் வண்ணங்களைத் தானே தீட்டிக்கொண்டது. நான் மொழியறிவதற்கு முன்னரேயே புலப்பெயர்வின் சுவை அறிந்த வாழ்வு பார்த்திபனுடையது. 83 ல் பிறந்த நான் அவர் 84ல் எழுதிய கதையை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்த பின்னர் வாசிக்கிறேன். நான் தவழும் முன்னரே குலையத்தொடங்கிய தமிழ் மனிதர்களின் வாழ்வை எழுதிச்செல்லும் பார்த்திபனின் கதை தொகுப்பு தன் காலக்கடிகாரத்தின் வழி என்னைப் பின்னோக்கி இழுத்துச்செல்கிறது. தசாப்தங்களுக்கு முன்னரான அவர்களது வாழ்வை, தத்துவக்குழப்பங்களை, எண்ணியதை எண்ணியபடி வாழமுடியாக் கோபத்தை, அடையாள இழப்பின் தத்தளிப்பை, போலிகளின் இடையில் நசிவுறும் வாழ்வின் புழுக்கத்தை  இந்தப்பயணத்தில் அது எனக்குக் காட்டியது. பார்த்திபனின் கதைகளில் சொற்களின் வாணவேடிக்கையும் இல்லை அதே வேளை சொற்களின் வாரியிறைப்பும் இல்லை. சிலவேளைகளில் நம்மைக் கவரும் சொற்களாயில்லாதிருந்தாலும் கூட சிக்கனச் சொற்களால் சொல்லப்படும் கதைகள் அவருடையன.

இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பாக 1998 ல் பார்திபனின் மிகவும் முக்கியமான கதைகளில் ஒன்றான தீவு மனிதன் எழுதப்படுகிறது.புத்தாயிரத்துக்குள் வேகமாக நுழைந்துகொண்டிருந்த  மனிதகுலம் தன் சகமனிதனை எப்படிக் கைவிட்டுச் செல்கிறது என்பதையும், சக மனிதன் மீதான பரிவை உதறிக்கடக்கும் சுயநலத்தின் வெம்மை தாங்காது உள்ளொடுங்கும் ஒரு தீவு மனிதனைக் குறித்த கதை அது. மீள மீளத் தன்னை வஞ்சிக்கும் உலகத்திடமிருந்து தப்பித்து உள்ளொடுங்கும் உயிரியாகத் தன்னை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் மனிதன் அவன். இன்றைய யதார்த்தத்தில் நாம் அனைவரும் தீவு மனிதர்களே. புதிரான நம் உலகத்தின் மிகப்பெரிய புதிரே நம் சகமனிதனின் மெய்யான முகம் எதுவென்பதுதான்.ஆக தீவு மனிதன் எழுதப்பட்ட காலத்திலும் பார்க்க இப்போது அது இன்னும் செறிந்த அர்தத்தத்துடன் மீளவும் படிக்கவேண்டிய கதையாகிறது. சிறந்த படைப்பென்பது நீளும் காலம்தோறும் காலவதியாகாது தன்னைப் புதுப்பித்தபடியே இருக்குமொன்றுதான் – அந்த வகையில் பார்த்திபனின் இந்தக்கதையும் தன்னைப்புதுப்பித்தபடியிருக்கிறது.

நம் சமகாலம் மெய்நிகர் உறவுகளின் காலமாக இருக்கிறது. அன்பை வெளிப்படுத்த, அரவணைக்க, கோபம் காட்ட, வஞ்சம் தீர்க்க,பெருமையைப் பீற்றிக்கொள்ள, சவடால் விட, காமம் தணிக்க நம்மிடமிருந்த அன்பின் வழியான பழைய முறைகள் அத்தனையும் காலாவதியாகிவிட்டன. இன்று  இணையம் கட்டமைத்த மெய்நிகர் உலகத்துச் சமூகவலைத்தளத்தின் திறந்தவெளியிலேயே இவை அனைத்தும் நிகழ்ந்து முடிகிறது. ‘மனிதர்கள் தனிவிதம் அவர்தம் சோசியல் மீடியா ஐடி-க்கள் பலவிதம்’ என்றவாறான சமகாலத்தில் நாங்கள் வாழநேர்ந்திருக்கிறது. ‘அன்பு பாதி,அழுக்குப் பாதி’ என்றிருந்த நம்முடைய முழுமையான அடையாளம், இன்று அன்புக்கு ஒரு ஐடியும், அழுக்குக்கு ஒரு ஐடியுமாக இரண்டாகப் பிரிந்திருக்கிறது. இந்த உலகம் தன் சுயத்தை இழக்கவிரும்பாத வஞ்சகர் உலகத்தின் சூட்சுமங்களை விலத்தி நடக்கும் வித்தைதெரியா மனிதர்களைத் தீவு மனிதர்களாக்கித் தண்டிக்கிறது. சக மனிதனின் மெய்யான தோற்றத்தை கண்டடைய இன்றைக்கு நம் காலம் நம்மிடம் மேலதிக உழைப்பைக் கோரிநிற்கிறது. இயல்போடிருத்தல் என்பதே அதிகமும் மனஉழைச்சலைத் தருவதாயுள்ளது. வதைபடாதிருக்க தீவு மனிதர்கள் முன்னிருக்கும் ஒரே தெரிவு உள்ளொடுங்குதல் என்பதே. அதைக் கடப்பது எப்படி என்கிற உரையாடலை நம்மிடையே தொடங்கவேண்டியதன் அவசியத்தை உருவாக்கியிருக்கிறது தீவு மனிதன் என்ற சிறுகதை. இலக்கியம் என்பது சமூகத்தின் விகாரங்களிடமிருந்து விலகி நடக்கும் வழிகளை மனிதனுக் சொல்லித்தரும் ஒன்றென்றால்  நம் உள்ளங்கைகளிலே நம்மைச் சிறைப்படுத்தியிருக்கும்  திறன்பேசித் தீவுகளுக்குள் ஒடுங்கிக் கொண்டிருக்கும்  நம்மிடம் நாம் பயணிக்கும் வழி சரியானதுதானா எனக்கேள்வியெழுப்பும் பார்த்திபனின் சொற்கள் இலக்கியமன்றி வேறென்ன?

பார்த்திபனின் கதைகளில் ஒரு கொள்கை பரப்பாளரின் தொனி இடையிடையே வந்து சேர்கிறது. பார்த்திபன் என்கிற எழுத்தாளர்  பாத்திரங்களாக  மாறிக்கதைசொல்வதற்குப் பதிலாக பாத்திரங்கள் பார்த்திபனாக மாறித் தொலைக்கிறது சில சந்தர்ப்பங்களில். அதனால் தானோ என்னவோ எழுதுபவரும் ஒரு பாத்திரமாயிருப்பார் அவரது சில கதைகளில். தன்பாத்திரங்களைப் பற்றி, அல்லது கதைகள் பற்றி அதை வாசிப்பவருக்கு வரக்கூடிய அபிப்பிராயங்களுக்கு  அவர் கதைகளுக்குள்  உட்புகுத்தும் எழுத்தாளப் பாத்திரங்கள் வழி பதில் சொல்ல முற்படுகிறார் என்று தோன்றியது. சில கதைகளுக்குள் கதை எழுதுகிறவர் நுழைந்து கொண்டிருப்பது உறுத்திக்கொண்டிருந்தாலும் தனியே அதையும் கூட வெற்றிகரமாக ஒரு சிறுகதையாக எழுதிக்காட்டியும் இருக்கிறார் பார்த்திபன். ‘மூக்குள்ளவரை’ என்ற தலைப்பில் ஒரு அட்டகாசமான கதை அது. இலக்கியத்தின் போலித்தனங்களை, ஒன்று எழுத இன்னொன்றாகப் புரிந்து கொள்ளப்படுதலை, தனக்குத்தானே பட்டமளிக்கும் இலக்கியவியாதிகளை, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட எழுத்துக்களை என, கதை எழுதப்படும் விதத்தை சமையல் குறிப்பை எழுதுவது போல எழுதிச்செல்லும் பார்த்திபனின் எள்ளலான மொழியும், சம்பவங்களும் சேர்ந்து அதுவொரு முழுமையான கதையாய் சமகால எழுத்துலகின் மீதான விமர்சனமான சிறுகதையாய் பரிமளித்திருக்கிறது.

ஈழத்தமிழர்கள் அரசியல் பிராணிகள்; ஈழத்தமிழ் எழுத்தென்பது முழுக்க முழுக்க அரசியலால் இயங்குவது. பார்த்திபனுக்கும் அரசியல் இருக்கிறது. அது அம்மாக்களின் அரசியலாய் இருக்கிறது என்பதுதான் ஆறுதலானாது. எதிரி, துரோகி, தியாகி அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாத கதைசொல்லியாக அவர் இருக்கிறார். அவர் இந்த சூழலில் எஞ்சியிருக்கும் அரசியலை ‘கோதாரி விழுந்த’ அரசியலாகவும், ‘நாசமாய்ப் போன’ அரசியலாகவும் தான் கடக்கிறார். ஆக அவர் கொண்டிருக்கும் அரசியலென்பது. மகனின் நைந்து போன பழைய சறமொன்றைத் நினைவெனத் தலைக்கு வைத்துப் படுக்கும் அம்மாக்களின் அரசியல். அதையே அவர் ‘அம்மாவும் அரசியலும்’ என்ற கதையிலும் எழுதிச் செல்கிறார்.

பார்த்திபனின் கதைமாந்தர்கள் நம்மிடையே வாழ்பவர்களே,  ஏன் சொல்லப்போனால் நானும் நீங்களுமே. நம்மில் அநேகர் செய்வதைப்போல குற்றவுணர்வின் தவிப்பும், சரிக்கும் பிழைக்குமிடையிலான தத்தளிப்புமாக வாழ்வைக் கடத்தநேர்கிறவர்களே. அடிமனத்தில் எப்போதும் அநீதிகளுக்கெதிராகப் பொங்குகிறவர்களாகவும் அதனால் ஏற்படப்போகும் பக்கவிளைவுகள் படமெடுத்தாடப் பின் பொங்கியதைத் தண்ணியூத்தி அணைத்துவிட்டுப் பம்முகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ‘ஒருதொழிலாளியும் ஒரு தொழிலாளியும்’ என்ற கதையில் ஒரு  குர்திஸ் தொழிலாளி வெளியில் தன் மக்களுக்காக வேலை செய்வதற்காக தொழிற்சாலையில்  மேலதிக நேரம் வேலைசெய்ய மறுப்பதால் முதலாளி அவனை  வேலையில் இருந்து நீக்குவார். தன் சகதொழிலாளியான குர்திஸ்காரனுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதே சரியெனத் தெரிந்திருந்தும் தமிழ்த் தொழிலாளி முதலாளியைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் பேசாமலிருப்பான். இவ்வகையான இயலாமையின் விம்முதலே இப்படைப்பாளியின் குரல். இப்படியான பாத்திர வார்ப்புகளின் வழி நாங்கள் கடக்கவேண்டிய மௌனத்தை, சாதாரணன் தவிர்க்கமுடியாதிருக்கும் இயலாமையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கியபடியிருக்கிறது பார்த்திபனின் கதைகள்.

அது மட்டுமல்ல அவருடைய கதைமாந்தர்கள் சமூகத்தின் நோய்க்கூற்று மனநிலையையும் சுமந்தலைகிறார்கள்.  உதாரணமாக ‘வந்தவள் வராமல் வந்தாள்’ என்ற கதையில் கதைசொல்லியின் தங்கை ஏஜென்சிக்காரர்களால் ஜேர்மனிக்கு அழைத்துவரப்படுவாள். அவளுக்குப் பேசி வைத்திருந்த மாப்பிள்ளை ஏஜென்சிக்காரர்கள் கொண்டு வாற வழியில் எல்லாவற்றையும் முடித்துவிட்டுத்தான் கொண்டு வருவார்கள் என்கிற ஊர்க்கதையை நம்பி அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிடுவான். ஈழத் தமிழ்ச்சமூகம் இப்படியான குருட்டு நம்பிக்கைகள் பலவற்றைச் சுமந்தலைகிறது. இந்தக்கதையைப் பார்த்திபன் 1995ல் எழுதுகிறார். 95ல் ஏஜென்சிக்காரன் எல்லாத்தையும் முடிச்சிருப்பான்  என்று கலியாணம் கட்ட மறுத்த இந்தச் சமூகம், அதிலிருந்து கொஞ்சமும் தன்னை மாற்றிக்கொள்ளாமல்,  2009ல் வன்னியிலிருந்து பெண் எடுக்கமாட்டோம் ஆமி எல்லாத்தையும் முடிச்சிருப்பான் என்று கெக்கட்டமிட்டது.

அதற்கும் ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் கழித்து  தன்னுடைய 14 வருட வாழ்வை இயக்கத்திலும் 4 வருடங்களை இலங்கை இராணுவத்தின் சிறையிலுமாய்த் தின்னக்கொடுத்த என் நண்பர் ஒருவருக்கு நண்பர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பாவில் வாழும் தமிழ்  மணமகள் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் புனர்வாழ்வுக்காரர் எல்லாருக்கும் விசஊசி அடிச்சுப்போட்டாங்கள் என்கிற பச்சை உண்மை தமிழ்ச் சமூகத்தில் தீயெனப்பரவியபோது அவரது திருமணம் நின்று போனது. அந் நண்பர் ‘நாப்பது வயதுக்குமேல் நாய்படாப் பாடென்பது உண்மைதான் மச்சான்’ எனச்சொல்லிச் சிரித்தபோது. சொற்களற்ற இரைச்சலால் தொலைபேசி நிறைந்தது.

உண்மையில் சமூகத்தின் இந்த நோய்க்கூற்று மனநிலையின் மீதான வெறுப்பே பார்த்தீபனின் எழுத்தை எழுதிச் செல்கிறது. 1995ல் எழுதப்பட்ட பிரதியின் பாடுபொருள் தசாப்தங்கள் தாண்டியும் பதிலளிக்கமுடியாத கேள்விகளை எழுப்பவல்லதாயிருப்பதே அப்பிரதியின் இலக்கியப் பெறுமதி என நான் நிச்சயமாக நம்புகிறேன்.

பார்த்திபனின் கதைகளின் ஆன்மாவாக உள்ளோடிக்கொண்டிருப்பது அறவுணர்வுதான். தன் அறவுணர்வைத் தின்று செரித்தபடி எங்கென்று தெரியாமலே விரைந்தபடியிருக்கும் மனிதகுலத்தினைச் சற்றுத் தாமதிக்க வைக்க முயற்சிக்கும் கேள்விகளைத்தான் அவர்கதைகள் காவியிருக்கின்றன. கவர்ந்திழுக்கும் சொற்களையும், துல்லிய விவரணைகளையும் அவரது கதைகள் கொண்டிருக்காமலிருக்கலாம். ஆனால் தம் மனங்களை இறுகச் சாத்தியபடியிருக்கும் மனிதர்களின் மனக்கதவுளை பார்த்திபனின் கதைகள் ஓங்கித் தட்டுகின்றன. சொல்லைப்போலச் செயலில்லாமலிருப்பதன் அபத்தமே பார்த்திபனை அலைக்கழிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்தளவு குறைந்தபட்ச நியாயத்தோடு வாழ முயற்சிக்கவேண்டும் என்கிற தத்தளிப்பு அவரது கதைகளில்  மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகிறது. ‘இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ’ என்கிற கதையில் ஏஜென்சிக்காரர் கேட்ட காசைத் தராததால் புனிதா என்கிற பெண்ணை ரஷ்ஷியக் ஹோட்டலில் கைவிட்டு வந்துவிடுகிறார்கள். அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். ஏஜென்சியிடம் வேலை செய்யும் ஒருவன் குறைந்தது அவளது மரணத்தையாவது அவளது குடும்பத்துக்கு அறிவிக்கலாம் என்று சொல்கிறார். ஏஜென்சிக்காரனோ அவனைக் கெட்ட தூசணத்தால் ஏசிப் போனை வைக்கிறான். ஒருவனிடம் மெல்லிய கீற்றாயேனும் தோன்றும் அறவுணர்வை எப்படித் தொலைத்துக்கட்டுவதென்பதை இந்தக்கதை எழுதிக்காட்டுகிறது. அத்துடன் புலம்பெயர்ந்தவர்களின் வழியென்பது எத்துணை துயரம் வாய்ந்ததென்பதும் அது கடவுளாலும் கைவிடப்பட்ட பாதையென்பதையும் பதட்டத்தோடு பதிவுசெய்கிற கதையிது. ஸ்ருரண்ட் விசாவிலோ, ஸ்பொன்சரிலோ வந்தவர்களுக்கு இது இலக்கியமா என்பதில் பலத்த சந்தேகங்கள் இருக்கலாம். வெள்ளவத்தை விசாப்பிள்ளையாருக்கு நேத்தி வைத்துவிட்டு, ரசியாவின் குளிரிலும், ஆபிரிக்க வெம்மையிலும், மலைகளையும் உறைந்த நதிகளையும் வெறுங்காலால் கடந்தவனால் அல்லது கடந்தவளால் இதை இலக்கியத்தின் உச்சமெனத்தான் கொண்டாடமுடியும்.

பார்த்திபனின் ஆகச்சிறந்த கதையென நான் கருதுவது ‘கெட்டன வாழும்’ கதையைத்தான். தனது காருக்குள் தஞ்சமடைந்த அபலைப்பெண்ணுக்கு உதவ விரும்பும் மனமுடைய கதைசொல்லி தவிர்க்க முடியாமல் அவளை தன் வீட்டை விட்டு வெளியேற்ற நேர்கிற இயலாமையும், அவளது மரணத்தின் பின்னரான குற்றவுணர்வில்  அவன் தளும்பித்துடிக்கும் துடிப்பும்  என  மனித மனத்தின் பலத்தை பலவீனத்தை அறஞ்செய்ய விரும்பினும் அனுமதிக்காத  நிகழ்காலத்தை மிக அற்புதமாக கதையாகப் பதிவு செய்கிற கதை அது. மனிதநேயம் என்பது எப்போதும் ஏன் அதிகம் விலைகொடுத்தாகவேண்டிய ஒன்றாகவேயிருக்கிறது. மிக இயல்பாயத் சகமனிதனின் துயரம் கண்டிரங்கும் சாத்தியங்களை இல்லாதொழித்திருக்கும் இவ்வுலகம் எதைநோக்கிப்போய்க்கொண்டிருக்கிறது. வலியன வாழும் என்கிற ஆபத்தான இயல்பொழுங்கில் இருந்து கெட்டன வாழும் என்கிற பேராபத்தை நோக்கி மனிதகுலத்தை தள்ளிக்கொண்டிருப்பது என்ன ? என்கிற கேள்விகளால் நிறையத் தொடங்குகிறது அக்கதை வாசிப்பின் பின்னரான மனம். படைப்பின் நிறைவென்பது அதன் நிகழ்த்துகை முடிந்த பின்னரும் நமக்குள் எஞ்சியிருக்கும் அதன் இயல்பே. கெட்டன வாழும் அவ்வியல்பு கொண்டவொன்று.

கதை என்கிற இந்தத் தொகுப்பில் பார்த்திபன் என்கிற ஏஜென்சிக்கார் வாசகர்களின் தேசத்துக்கு தன்கதைகளை ஏற்றி அனுப்புக்கிறார். சில றூட்டுகள் செமையாக ஓடி பல கதைகள் வாசகரின் இதயத்தைத் தொடுகின்றன. சில கதைகள் பாதி வழியில்  உலர் சொற்களின் பாலைவனத்திலோ, உறைபனியாற்றின் உள்ளமிழ்ந்தோ வாசகரின் தேசக்கரையை தொடமுடியாமல் போகின்றன. பார்த்திபன் எழுதிய இரண்டு கதைகளைத் தவிர்த்திருக்கிறதாக கதை வந்த கதையில் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். கதைகளின் தேர்வில் இன்னும் கொஞ்சம் காறராக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அது பார்த்திபனின் எழுத்துக்கள் பற்றிய இன்னமும் தெளிவான ஒரு சித்திரத்தை வாசகர்களுக்கு வழங்கியிருக்கும்.

சமூகத்தின் இயலாமையை,வெளியேற்ற முடியாதபடி அது தன்னகத்தே கொண்டிருக்கும் மடமைத் தனத்தை, காலத்துக்கும் அது பேணவேண்டிய அறவுணர்வைச் சுட்டிக்காட்டுவதே இலக்கியத்தியன் கடனென்று நான் கருதுகிறேன். பார்த்திபனின் கதைகள் அந்தக் கடமையின் வழியேதான் நடக்கின்றன.

-த. அகிலன்

Related posts

அரசியல் கிரிக்கெட் – அருண்மொழிவர்மன்

editor

ஏவல் – பாத்திமா மஜீதா

editor

கிணறு -ஷமீலா யூசுப் அலி

editor

Leave a Comment