Image default
இதழ்கள் வெளியீடுகள்

புதிய சொல் 06

வணக்கம்,

ஆறாவது புதிய சொல்லின் ஊடாக மீண்டும் சந்திக்கின்றோம்.  காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல்லின் இந்த இதழின் வருகை சற்று தாமதமாகி இருக்கின்றது என்றாலும் ஈழத்து தமிழ்ச் சூழலில் இலக்கிய இதழாக தொடர்ந்து இயங்கும்போது எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களையும் மன நெருக்கடிகளையும் அநேகமான வாசகர்கள் அறிந்திருப்பர் என்றே கருதுகின்றோம்.  ஆனாலும் புதிய சொல் இயங்க ஆரம்பித்து ஆறாவது இதழ் வரும்போதே தனது ஆரம்ப காலங்களில் எதிர்கொண்ட சந்தேகங்களையும் எதிர்மறை அம்சங்களையும் களைந்து நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் பயணித்திருப்பதோடு பிரதிகளின் விற்பனையையும் எழுதுபவர்களின் பங்களிப்பையும் அதிகரித்திருக்கிறது. தொடர்ந்தும் ஆழ்ந்தகன்ற, காத்திரமான வளர்ச்சிப்பாதையில் பயணிக்கவே புதியசொல் விரும்புகிறது. இந்தப் பயணத்தின் முக்கியமான அடுத்த காலடியாக பதிப்பு முயற்சிகளையும் வெளியீட்டு முயற்சிகளையும் தனக்குள் உரையாடியபடியும் தொகுத்தபடியும் இருக்கிறது.  புதிய சொல் இதழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பதையும் அதனைப் பரவலாக்குவதையும் போல புதிய சொல் வெளியீடுகளுக்கும் ஆதரவளித்து இந்தக் கனவுகளை சாத்தியப்படுத்த வாசகர்களும் நலன்விரும்பிகளும் உதவுவார்கள் என்று முழுமையாக நம்புகின்றோம். உரையாடல்களில் நம்பிக்கை வைத்திருக்கின்ற புதிய சொல் வாசகர்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கருத்துப் பகிர்வுகளையும் எமது பதிப்பு முயற்சிகள் தொடர்பிலும் எதிர்பார்க்கிறோம்.  எமது முன்னைய இதழ்களில் இடம்பெற்ற ஆக்கங்கள் தொடர்பாக தனிப்பட பல்வேறு நண்பர்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொண்டபோது அவை ஆக்கபூர்வமாக இருக்கின்றதாக கருதியபோதெல்லாம் அவற்றினை எழுத்துவடிவில் தந்தால் புதிய சொல் இதழில் பிரசுரிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம்; ஆயினும் இதுவரை அவ்விதம் எந்தவிதமான உரையாடல்களும் நிகழவில்லை என்பதையும் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றோம். 

இதனைத் தாண்டி, சமகால நிகழ்வுகளையும் நிலைமாற்றங்களையும் தொடர்ச்சியாக நாம் அவதானித்தே வருகின்றோம் என்ற அடிப்படையில் கலை, இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு பற்றியதும் கலை இலக்கியங்களில் சமூகத்தின் இடைவினை பற்றியதுமான எங்களது பார்வைகளைப் பரிசீலனை செய்யவும் அவை தொடர்பில் தொடர்ந்து உரையாடவும் விரும்புகின்றோம்.  தொடர்ச்சியாக நூறுநாட்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்கள் தமது பிரச்சனைகளுக்காக நடுவீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.  காணாமல் ஆக்கப்பட்டோர், காணி மீட்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டங்கள் என போராட்டப் பந்தல்கள் எங்கும் முளைத்திருக்கின்றன; மனிதர்களோ நாட்கணக்கில் வீதிகளில் இருந்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.  முன்னாள் போராளிகள் தொடர்பில் நமது சமூகம் தொடர்ந்தும் காட்டிவரும் அசமந்தப் போக்கும் அவர்களது வாழ்வாதாரம் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், அமைப்புகளும், உள்ளூர்வாசிகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் இறுகிய மௌனமும் மிகவும் கொடியது. இறுதியுத்தத்திற்குப் பின் உள்ள விடுதலைப் புலிப் போராளிகளோடு மட்டும் குறுக்கிக்கொள்ளாது இனரீதியானதும் சமூகரீதியானதுமான ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும், மக்களுக்கான விடுதலையை வாங்கித்தரவும், தாம் கொண்ட இலட்சியத்துக்காகவும்  வீடுகளை விட்டுப்புறப்பட்டு இன்று அங்கவீனர்களாயும் மனம் பாதிக்கப்பட்டவர்களாயும் சமூகத்திலிருந்து ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும் மௌனமாயும் இறுகியும் போயுள்ள அனைத்துத் தரப்பினரையும் பற்றிய அக்கறையும் கவனயீர்ப்பும் உடனடியாக மக்கள்மத்தியில் உருவாகவும் பரவலாகவும் வேண்டும்.  இவர்களில் மிகக் குறைந்த வீதத்தினர் இன்றும் தொடர்ந்து சமூகத்தில் செயற்பட்டு வந்தாலும் பெரும்பகுதியினர் கைவிடப்பட்டு குறித்த ஒரு காலத்திலேயே உறைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்துநின்ற கருத்துநிலைகள் மீதும் அமைப்புகள் மீதும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தாம் நம்பிய ஒன்றிற்காக உயிரையும் ஒப்புவிக்கத் தயாராயிருந்தவர்கள் இவர்கள் என்பதை கவனத்திற்கொண்டவாறே இவர்கள் பற்றிய உரையாடல்களைத் தொடர்வேண்டும்.  அந்த உரையாடல்கள் இவர்களின் பொருட்டு எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான உரையாடலாக குறுகிவிடாமல் அவர்களின் குரல்களையும் உள்வாங்கிக்கொண்டே பரந்ததளத்தில் பேசுவனவாக அமையவேண்டும்.  இதுபோன்ற சமகாலப் பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் கலை இலக்கியப் வெளிப்பாடுகளின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் முயற்சிசெய்யவேண்டும்.  நிகழ்வுகளிலும் போராட்டங்களிலும் நேரடியாகக் கலந்துகொள்வதற்கு அப்பால் இத்தகைய வெளிப்பாடுகளே காத்திரமான பங்களிப்பாக அமையும்.  புதிய சொல் தனது ஆரம்ப இதழ்களிலிருந்து வெவ்வேறு வெளிப்பாட்டு வடிவங்களின் ஊடாக இந்த உரையாடல்களை முன்னெடுத்திருப்பதுடன் தொடர்ந்தும் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவே விரும்புகின்றது. 

ஈழத்து இதழ்களும் பதிப்புத்துறையும் வளரவேண்டியதன் அவசியத்தையும் அதற்குத் தேவையான வலையமைப்புகளையும் சந்தைப்படுத்தல் முயற்சிகளையும் பற்றிய எமது கரிசனையை நாம் தொடர்ந்து வெளியிட்டுவருகின்ற அதேநேரம் இவை எதிர்கொள்ளும் சவால்களும் நெருக்கடிகளும் அதிகரித்தே வருகின்றன.  அச்சிடுவதற்கான செலவுகள் அதிகமாக இருப்பதன் காரணமாக நியாயமான காப்புரிமைகளும் எழுத்தாளர்களுக்கான சன்மானமும் வழங்குவதும் கடினமாக இருக்கின்றது.  அதுபோல புலம்பெயர் நாடுகளுக்கு இதழ்களை அனுப்பவதற்கும் சந்தைப்படுத்துவதற்குமான சரியான பொறிமுறைகளை உருவாக்குவதும் கடினமானதாகவே இருக்கின்றது.  கலை இலக்கியச் செயற்பாடுகளும் பதிப்பு முயற்சிகளும் வெறும் பண்பாட்டுச் செயற்பாடு மட்டுமல்ல.  அவை ஓர் இனத்தின் ஆன்மாவை உயிர்ப்புடன் வைத்திருப்பதுடன் இருப்பையும் உறுதிப்படுத்துவன.  அதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்.

தோழமையுடன்

புதிய சொல்   

Related posts

புதிய சொல் 07

puthiyasol

புதிய சொல் 02

editor

புதிய சொல் 05

puthiyasol

Leave a Comment