Image default
இதழ்கள் வெளியீடுகள்

புதிய சொல் 07

வணக்கம்

புதிய சொல்லின் இந்த இதழும் கடந்த சில இதழ்களைப் போல தாமதமாகவே வெளிவருகின்றது.  ஆயினும் ஈழத்துப் பதிப்புத்துறை எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் காகிதங்களின் விலையேற்றம், புலம்பெயர் நாடுகளுக்குப் புத்தகங்களை அனுப்பும் கூலி தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றமை போன்ற காரணிகளையும் வைத்துப் பார்க்கின்றபோது தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதன் அவசியமும் பொறுப்புணர்வும் இன்னமும் அதிகரிக்கின்றது. 

புதிய சொல்லின் முதலாவது இதழிலிருந்தே சந்தாதாரர் ஆகுவது எப்படி என்று அக்கறையுடன் எம்மிடம் கேட்கப்பட்டபோதும் தபால் செலவுகள், அனுப்பும் வழிமுறைகள் ஆகியவற்றில் இருந்த குழப்பங்கள் காரணமாக அதற்கான பொறிமுறைகளை உடனடியாக உருவாக்கமுடியவில்லை.  ஆயினும் சென்ற புதிய சொல் வெளிவந்த பின்னர் எம்மிடம் சந்தாதாரர் ஆகுவதற்காக பலர் அணுகியிருந்தார்கள்.  அவர்களின் ஆதரவுக்கு நன்றி செலுத்திக்கொண்டு இந்த இதழ் முதலாக புதிய சொல் இலங்கைக்குள் சந்தாதாரர் ஆவதற்கான வசதிகளை அறிமுகப்படுத்துகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

புதிய சொல் தொடர்ச்சியாக கலை இலக்கியச் செயற்பாட்டுக்கான இதழ் என்கிற அடையாளத்தை முன்னிலைப்படுத்துவதோடு, ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெறும் கலை இலக்கியச் செயற்பாடுகளை அக்கறையுடன் அவதானித்துவருகின்றது.  அந்த வகையில் சென்ற செப்ரம்பர் மாதம் 15 முதல் 20ஆம் திகதி வரை இடம்பெற்ற மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்படவிழாவையும் முக்கியமான ஒன்றாகவே கருதுகின்ற அதேநேரம் அது ஒழுங்குசெய்யப்பட்டிருந்த காலப்பகுதி குறித்தும் விழா ஒழுங்கமைப்புகள் குறித்தும் ஏற்பட்ட விமர்சனங்களையும் முக்கியமானதாகவே கருதுகின்றோம்.  அதனால் யாழ்ப்பாணத்துத் திரைப்பட விழா பற்றிய ஐந்துபேரின் கருத்துப் பகிர்வுகளை இந்த இதழில் வெளியிட்டிருக்கின்றோம்.  இத்தகைய கூட்டு உரையாடல்களும் கருத்துப்பகிர்வுகளும் ஆரோக்கியமான ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க அடிகோலும் என்றும் நம்புகின்றோம். 

மொழிபெயர்ப்புகளின் தேவை பற்றி நாம் தொடர்ச்சியாகப் பேசியும் முக்கியமான சில மொழிபெயர்ப்புகளை எமது இதழ்களில் வெளியிட்டும் வந்துள்ளோம்.  இந்தப் புதிய சொல் இதழில் The Politics of Plunder: The Cholas in Eleventh Century Ceylon என்கிற George W Spencer இன் கட்டுரையின் தேவாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகி இருக்கின்றது.  பொதுவாக ஈழத்தமிழர்களுக்கு சோழர்கள் குறித்து அதிகம் நேர்மறையான, பெருமிதமான மதிப்பீடே இருக்கின்றது.  சோழர்களின் படையெடுப்புகள் பெருமிதமாகப் பார்க்கப்படுகின்றபோது அந்தப் படையெடுப்புகள் குறித்த விமர்சனபூர்வமான பார்வைகள் வெகுசன மக்களிடையே இன்னும் உருவாகவில்லை என்றே சொல்லவேண்டும்.  இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலத்திற்குப் பின்னரும் இடம்பெற்ற ஆய்வுகளாலும் வரலாற்று ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதனாலும் பல்வேறு புதிய அடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.  ஆயினும் சோழர்கள் குறித்த வெகுசன அபிப்பிராயத்துடன் ஒரு முரண் உரையாடலை நிகழ்த்துவதற்கு ஒரு திறவுகோலாக இந்தக் கட்டுரை முக்கியமானது.  இந்த மொழிபெயர்ப்பில் மிகவும் உற்சாகமாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்ட தேவா அவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். 

புதிய சொல்லின் முன்னைய இதழ் ஒன்றில் குறிப்பிட்டதுபோல ஈழத்துப் பதிப்புத்துறையும் இதர கலை இலக்கிய வடிவங்களும் தம்மை நிலைப்படுத்திக்கொள்ள புலம் பெயர் நாடுகளில் வலையமைப்புகளை உருவாக்குவதும் விற்பனையைப் பரவலாக்குவதும் அவசியமானதாகும்.  இதுவரை அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் உள்ள சில நண்பர்கள் புதிய சொல் இதழ்களைப் பெற்று அந்நாடுகளில் விநியோகித்துப் பேருதவியாற்றுகின்றனர்.  இதன் இன்னொரு கட்டமாக சென்ற ஜூலை மாதம் இலண்டனில் (இங்கிலாந்து) இருக்கின்ற விம்பம் அமைப்பினர் புதிய சொல்லின் முதல் ஆறு இதழ்களுக்கான அறிமுக நிகழ்வினை ஒருங்கமைத்திருந்தனர்.  இதுபோன்ற முயற்சிகளில் புலம்பெயர் நாடுகளில் உள்ள கலை இலக்கிய அமைப்புகள் ஈடுபடும்போது உருவாகும் உரையாடல்களும் பரிவர்த்தனைகளும் வளர்ச்சிக்கான உந்துதலாக அமையும்.

எமது முதலாவது இதழில் இருந்து நாம் உரையாடல்களுக்கான பங்கேற்பைக் கோரி இருந்தபோதும் அவை நிகழவில்லை என்பதையும் முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.  ஆயினும் இந்த இதழில் வாசகர் கடிதங்களாகவும் வாசகர் பங்கேற்பாகவும் எமக்குச் சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன.  இவற்றையெல்லாம் நாம் நேர்மறை சமிக்ஞையாகவே பார்க்கின்றோம்.  தொடர்ச்சியாக உரையாடுவோம்.  உரையாடலிற் பங்கேற்போம்.

புதிய சொல்

Related posts

புதிய சொல் 10

editor

புதிய சொல் 08

editor

புதிய சொல் 06

editor

Leave a Comment