Image default
இதழ்கள் வெளியீடுகள்

புதிய சொல் 09

வணக்கம்

புதிய சொல்லின் ஒன்பதாவது இதழுடன் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்திக்கின்றோம்.  காலாண்டு இதழ் என்று திட்டமிட்டு புதிய சொல் இதழ்களை வெளியிட முயன்றபோதும் கூட கடந்த இரண்டு இதழ்களிலும் ஏற்பட்ட கால தாமதம் என்பது மிக அதிகமானதாக உள்ளது. 

புதிய சொல்லானது கலை இலக்கியச் செயற்பாட்டுக்கான இதழ் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டே அதன் முதலாவது இதழ் முதலாக வெளிவருகின்றது.  அதன் ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் முதலாக அதன் வடிவமைப்பிலும் விநியோகத்திலும் விளம்பரப்படுத்தலிலும் ஈடுபட்டிருப்பவர்கள் தன்னார்வலர்களாகவே இவற்றைச் செய்வதுடன் பெரும்பாலும் பகுதிநேரத்தையே இவற்றுக்காக ஒதுக்கக் கூடிய சூழலே நிலவுகின்றது.  அத்துடன், பெரும்பாலும் வெவ்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர்களாகவும் இருப்பதுவும் ஒரு விதத்தில் இதழைக் குறித்த கால ஒழுங்கில் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்துவிடுகின்றது.  கால ஒழுங்கில் நிகழ்ந்துவிடுகின்ற இந்தத் தாமதம் புதிய சொல் நிகழ்த்தவிரும்புகின்ற உரையாடல்களைத் வீரியம் இழக்கப்பண்ணிவிடுகின்றது என்பதையும், அதன் செயற்பாடுகளுடன் இணைந்து பயணிப்பவர்களையும் ஆக்கங்களை வழங்குபவர்களையும் சோர்வடையைச் செய்துவிடுகின்ற அபாயம் இருக்கின்றது என்பதையும் குறித்து அக்கறைப்படுவதுடன் அதற்கான வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  இவை குறித்த உரையாடல்களை புதிய சொல் தன் உள்வட்டத்தில் நிகழ்த்தி சில மாற்றங்களை நோக்கிப்பயணிக்கின்றது என்பதையும் அதனூடாக இதுபோன்ற தாமதங்கள் எதிர்காலத்தில் நிகழ்வதைத் தவிர்த்துவிடலாம் என்றும் உறுதியளிக்கின்றோம்.  அந்த அடிப்படையில் 2018 ஆம் ஆண்டில் புதிய சொல்லின் ஒரு இதழ் மாத்திரமே வெளிவந்திருக்கின்றபோதும் 2019 இல் வெளிவருகின்ற இந்த இதழ் முதற்கொண்டு குறித்த காலக் கிரமத்தில் வெளிவரும் என்று உறுதியளிக்கின்றோம்.

புதிய சொல் இதழ்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்று தொலைபேசியூடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பல்வேறு தோழர்கள் எம்மிடம் கேட்டுவருகின்றார்கள்.  இலங்கையின் பல்வேறுபகுதிகளிலும் புதிய சொல் இதழ்கள் தற்போது கிடைக்கின்றன என்றாலும் இதழ்கள் பெற்றுக்கொள்வதை இன்னும் இலகுவாக்கும் பொருட்டு புதிய சொல்லின் இந்த இதழ் முதல் தபால் மூலம் புதிய சொல் இதழ்களைப் பெற்றுக்கொள்ளும் ஒழுங்கினைச் செய்துள்ளோம்.  இது பற்றிய விபரங்களை இந்த இதழில் காணலாம்.  முதற்கட்டமாக இந்த வசதி இலங்கைக்குள் மட்டுமே தற்போது சாத்தியம் என்றாலும் இலங்கைக்கு வெளியேயும் விநியோக ஒழுங்குகளைச் சீராக்க முயற்சிசெய்கின்றோம். 

புதிய சொல் இதழ்களை வடிவமைக்கவும், அச்சடிக்கவும் விநியோகிக்கவும் தேவையான செலவுகளை ஈடு செய்வதற்கான தொகையினை புலம்பெயர் நாடுகளில் இதழுக்கான வலையமைப்பினை பரவலடையச் செய்வதன்மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்பதை புதிய சொல் தனது முதலாவது இதழிலிருந்து வலியுறுத்திவருகின்றது.  இங்கிலாந்திலும் பிரான்சிலும் அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும் உள்ள புதிய சொல் நண்பர்களின் ஆதரவினால் அந்த நாடுகளில் இதழ்கள் கிடைக்கப்பெறுகின்றன, ஆயினும் இந்த வலையமைப்பு இன்னும் வளர்ச்சியடைந்தாலே புதிய சொல் மாத்திரமன்றி அதனையொத்த ஈழத்து இதழ்களும் பதிப்புத்துறையும் வளர்ச்சியடைய முடியும் என்று நம்புகின்றோம்.   கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அச்சுச் செலவுகள் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிகமாகியிருக்கின்ற சூழலில் ஒப்பீட்டு அளவில் குறைந்த எண்ணிக்கையான பிரதிகளே அச்சடிக்கப்படுகின்ற ஈழத்து இதழ்கள் பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளுகின்ற சவால் மிகக் கடுமையானது,  புதிய சொல் இதழ் பரவலாக வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்பதையும் குறிப்பாக ஈழத்தில் பொருளாதார ரீதியில் சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்பவர்களும் கூட புதிய சொல் இதழினை வாசிக்கவேண்டும் என்பதையும் கருத்திற்கொண்டு அதன் விலையினை 50 ரூபாய்களாகவே நாம் இதுவரை பேணி வந்தோம்.  நன்கொடைகளாக கிடைக்கின்ற சிறு உதவிகளையும் புலம்பெயர் நாடுகளில் தோழர்கள் சிலர் விற்பனை செய்து மிகவும் நேர்மையாக பணத்தினை உடனடியாக அனுப்பிவைப்பதனையும் வைத்தே இவ்வாறாகக் குறைந்த விலையில் இதழினை விற்பது ஓரளவு சாத்தியமாக இருந்தது.  ஆயினும் தொடர்ச்சியான விலையேற்றங்களாலும் நாம் இவ்விதம் விலையைக் குறைத்து வைத்திருப்பது ஈழத்துப் பதிப்புமுயற்சிகளில் ஈடுபடும் சக தோழர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளையும் கருத்திற்கொண்டு இந்த இதழ் முதலாக புதிய சொல்லின் விலையினை 100 ரூபாய்களாக அதிகரிக்கின்றோம் என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.  இன்றைய சூழலில் ஈழத்துப் பதிப்பகங்களின் முயற்சிகளும் கலை இலக்கிய முயற்சிகளும் கடுமையான சவால்களை எதிர்கொண்டபடியே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்ள எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஊர்கூடி தேரிழுப்பதே!

தோழமையுடன்

புதிய சொல்  

Related posts

புதிய சொல் 02

editor

புதிய சொல் 01

puthiyasol

புதிய சொல் 10

editor

Leave a Comment