Image default
இதழ்கள் வெளியீடுகள்

புதிய சொல் 10

வணக்கம்,

புதிய சொல் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் நிறைவடைகின்ற காலப்பகுதியில் புதிய சொல்லின் பத்தாவது இதழுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கின்றோம்.  கால தாமதங்களுடனே புதிய சொல்லின் கடந்த சில இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு இதழினூடாகவும் நாம் முன்னெடுக்கின்ற உரையாடல்கள் சமூகவெளியிலும் தனிப்படவும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன என்பது குறித்து மகிழ்ச்சியே.

புதிய சொல் தனது முதலாவது இதழில் இருந்தே ”கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டுக்கான இதழ்” என்பதாகவே தனது நோக்கினை வரித்துக்கொண்டிருப்பதுடன் அதனைத் தன் அட்டையில் தாங்கியபடியே புதிய சொல்லின் இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.  புதிய சொல்லின் ஆரம்பகாலங்களில் புதிய சொல் அரசியல் நீக்கம் செய்கின்றது என்பதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் புதிய சொல் தனக்கான அரசியலை எப்படிப் பேசுவது என்பது பற்றிய தெளிவுடனும் அரசியலை கலை, இலக்கிய வடிவங்களூடாகப் பேசுவது என்கிற நோக்குடனுமேயே தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது.

ஒடுக்குமுறைகளே இல்லாத சமூகம் என்கிற மானுட விடுதலைக்கான கனவே புதிய சொல்லின் இலக்கு; அதை நோக்கிய நீண்ட பயணத்தினை பண்பாட்டுச் செயற்பாடுகளூடாகவே புதிய சொல் மேற்கொள்கின்றது.  புதிய சொல் அதன் தொடக்கந்தொட்டுக் கூறிவருகின்ற ஈழத்தவருக்கான பதிப்பு முயற்சிகளை முன்னெடுத்தல், ஈழத்தவருக்கான கலை இலக்கிய வடிவங்களைக் கொண்டாடுதலும் உரையாடுதலும், ஈழத்தவரின் கலை இலக்கிய எழுத்து வடிவங்களை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான வலையமைப்பைக் கட்டியெழுப்புதல் ஆகியன ஈழத்தவருக்கெதிராக நிகழ்த்தப்படுகின்ற பண்பாட்டு ஆக்கிரப்பிற்கு எதிரான எதிர்க்குரல்களே!

புதிய சொல்லின் வேலைத்திட்டங்களாக இவற்றை எமக்கு முன்னரே வெவ்வேறு தலைமுறையினரும் கூட முன்னெடுத்திருக்கின்றனர் என்கிற பிரக்ஞையுடனும் அவர்கள் தொடக்கிவைத்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாகவுமே நாம் எமது பயணத்தைத் தொடக்குகின்றோம்.  சமகாலத்திலும் நாம் தனித்தவர்கள் இல்லை என்பதையும் அறிவோம்.  கருத்துநிலைகள், கலை இலக்கிய மதிப்பீடுகள் போன்றவற்றில் மாறுபட்ட தளங்களில் பயணித்தாலும் ஈழத்திலிருந்து சமகாலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற, இந்திய பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக கணிசமான முயற்சிகளை எடுக்கின்ற, அனைத்து இதழ்களையும் பதிப்பு முயற்சிகளையும் புதிய சொல்லின் நட்புசக்திகளாகவே நாம் கருதுகின்றோம்.  அந்த அடிப்படையில் ஈழத்திலிருந்து வெளிவருகின்ற இதழ்கள், பதிப்புகள் போன்றவற்றை எமது பயணத்தின் தோழமைச் சக்திகளாகவும் எமது இந்தச் செயற்பாட்டினை ஒரு விதத்தில் எம் முன்னோர்களுடனும் சமகாலத்தவர்களுடனும் இணைந்த ஒரு கூட்டுச் செயற்பாடாகவுமே நாம் கருதுகின்றோம்.  இந்தப் புதிய சொல்லில் இருந்து ஈழத்திலிருந்து வெளிவருகின்ற இதழ்கள், பதிப்பு முயற்சிகள் பற்றிய குறிப்புகளை வெளியிடவும் இருக்கின்றோம். 

அச்சூடகங்களூடாக நடக்கின்ற பண்பாட்டுச் செயற்பாடுகளை ஒப்பவே சமூக மட்டத்தில் நடக்கின்ற பண்பாட்டுச் செயற்பாடுகளும் முக்கியமானவை என்றபோதும் அவற்றுக்கான போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்பதுடன் அந்த நிகழ்வுகளுக்கும் அவற்றில் கலந்துகொண்டவர்களுக்கும் அப்பால் அந்த நிகழ்வுகள் முன்னெடுத்த உரையாடல்கள் நீட்சியடைவதில்லை என்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  இத்தகையை நிகழ்வுகளில் தொடங்கப்படும் உரையாடல்கள் சமூகத்தினராலும் ஊடகங்களாலும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும் அவர்களுக்கு அப்பாலும் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதும் அங்கே தொடரப்படும் உரையாடல்கள் அந்த உரையாடல்களை நிகழ்வுகளில் தொடக்கியவர்களுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்பதும் அதன் இடையறாத தொடர்ச்சிக்கான பொறிமுறை கட்டியெழுப்பவும் பேணப்படவும் வேண்டும் என்பதும் சமகாலத்தின் உடனடித்தேவைகளாக இருக்கின்றன.

இந்தப் புதிய சொல்லில் மரபுரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களைக் கவனப்படுத்தி ஒரு கட்டுரையும் யாழ் புத்தகத் திருவிழா, திரைப்படவிழா ஆகியனவற்றின் கலந்துகொண்டவர்களின் அபிப்பிராயங்களின் தொகுப்புமாக மூன்று பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.  இந்த மூன்று பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளையும் எங்கட புத்தகங்கள், கிழக்குப் புத்தகத் திருவிழா, பாடுமீன் புத்தகத் திருவிழா ஆகிய கண்காட்சிகளையும் புதிய சொல் சமகாலத்தில் நடந்திருக்கின்ற முக்கியமான பண்பாட்டு நிகழ்வுகளை மையப்படுத்திய பகுதியாகவே பார்க்கின்றது.  கடந்த காலங்களில் ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்ற பண்பாட்டு நிகழ்வுகளைப் புதிய சொல் கவனங்கொடுத்துப் பிரசுரித்திருக்கின்றது என்றபோதும் அப்படித் தொடர்ந்தும் பிரசுரிப்பதில் இருக்கின்ற சவால்களையும் நாம் உணர்ந்தேயிருக்கின்றோம்.  புதிய சொல்லை வாசிக்கின்ற தோழர்கள் இத்தகைய பண்பாட்டு நிகழ்வுகளைப் பற்றிய குறிப்பினைப் புதிய சொல்லிற்கு அனுப்பி வைத்தால் அது காலத்தாற் செய்த உதவியாக இருக்கும்.

இந்த ஆசிரியர் தலையங்கத்தைத் தொடங்கும்போதே ஐந்தாண்டுகளில் பத்து இதழ்கள் என்பது பற்றிக் குறிப்பிட்டே தொடங்கியிருந்தோம்.  இதழ்களாக எமது எண்ணிக்கைகள் குறைவாக இருந்தாலும் கடந்த ஐந்தாண்டு காலங்களில் சமூக, பண்பாட்டு ரீதியாக நாம் கணிசமான பங்களிப்பை நல்கியிருக்கின்றோம் என்ற நம்பிக்கையும் நேர்மையான மதிப்பீடும் எமக்குண்டு. 

ஒவ்வொரு இதழினூடாகவும் நாம் எமது வாசகர்களைச் சந்திக்கும்போதும் நாம் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்வுடனுமே நாம் இருந்திருக்கின்றோம்.  ஆயினும் இந்த இதழைப் பொறுத்தவரை கனத்த மனத்துடனேயே இந்த சந்திப்பைச் செய்கின்றோம்; எம்முடன் பயணித்த நண்பரும் தோழரும் முதன்மையான வாசகரும் பங்கேற்பாளரும் சகபயணியும் ஆலோசகருமான குமாரதேவன் என்கிற இடுக்கண் களைகின்ற நட்பினை இழந்தநிலையிலேயே இந்தப் புதிய சொல் வெளிவருகின்றது.  தோழர்களே, எமது சக பயணிகளை இழக்க இழக்க அவர்கள் கனவுகளையும் சேர்ந்து சுமந்து பயணிப்போம்!

தோழமையுடன்

புதிய சொல்

Related posts

புதிய சொல் 06

editor

புதிய சொல் 08

editor

புதிய சொல் 10

editor

Leave a Comment